சமீபத்தில் சரத்குமார், “நான் நடித்து வெற்றி பெற்ற `சூர்ய வம்சம்’ படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க முயற்சிகள் நடக்கின்றன. `சூரியன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் யோசனை உள்ளது.” எனத் தெரிவித்திருந்தார்.
தமிழ் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய வெற்றிபெற்ற படங்களில் முக்கியமானது ‘சூர்ய வம்சம்’. ஆர்.பி.சௌத்ரியின் தயாரிப்பில் விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார், ராதிகா, தேவயானி, ப்ரியா ராமன், மணிவண்ணன், ஆர்.சுந்தர்ராஜன் என பலரும் நடித்திருந்தனர். கடந்த 1997 ஜூன் 27-ம் தேதி வெளியான இப்படம், இன்றைய தலைமுறையினரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் `சூர்ய வம்சம் 2′ உருவாகிறதா என்று இயக்குநர் விக்ரமனிடம் பேசினேன்.
”குற்றாலத்தில் கதை விவாதத்தில் இருக்கும் போது எழுதின கதைதான் ‘சூர்ய வம்சம்’. இந்தக் கதையை சரத் சார்கிட்ட சொன்னதும், அவருக்குப் பிடிச்சு போச்சு. ‘‘ஒகே பாஸ்… அப்பா- பையன் ரெண்டையும் பண்ணிடலாம்’னு அவரே முடிவு பண்ணி ரெடியாகிட்டார். படத்துல எனக்கு பிடிச்ச சீன், ‘இட்லி உப்புமா’ சீன்தான். அதுதான் இன்னைக்கும் ஃபேமஸ்.
என்னோட எல்லா படங்களையும் வளசரவாக்கம் முருகன் கோயில்லதான் சென்டிமென்ட்டா ஆரம்பிப்பேன். அப்படித்தான் ‘சூர்யவம்சம்’ படத்தையும் அங்கேயே ஆரம்பிச்சேன். இன்னொரு விஷயம் காலையில முதல் ஷாட் எடுக்கற வரைக்கும் நான் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டதில்லை. முதல் நாள் காலையில ‘நட்சத்திர ஜன்னலில்…‘ பாடல்ல வரும் ஒரு சில ஷாட்ஸையும், அன்று மதியமே குஷால் தாஸ் கார்டனில் தேவயானி கலெக்டர் ஆபீஸ்ல இருக்கிற சீனுக்கான ஷாட்ஸையும் ஷூட் பண்ணேன். மணிவண்ணன் சார் இரண்டாவது பாதியில் காணாமல் போயிடுவார். அதுக்கு காரணம் அப்ப அவர் கால்ஷீட் ஒரு முழு படத்துக்கும் ட்ராவல் பண்ற மாதிரி கிடைக்கிறது கஷ்டமா இருந்துச்சு. அதனால, அவர் கேரக்டரோட உதவியா குமரேசன்ங்கற கேரக்டரை படம் முழுக்க கொண்டு போயிருப்பேன்.
ஆரம்பத்துல இந்தக் கதை தயாரிப்பாளர் சௌத்ரி சாருக்கு பிடிக்கல. பலரும் இதை ரொம்ப சாதாரணமான கதையாதான் நினைச்சாங்க. இந்தப் படம் ஏன் ஓடும், எதுக்காக ஓடும்னு தெரியாமல் ஆல் டைம் ரெக்கார்ட் அடிக்கும்னு நம்பின ஒரே ஆள் நான் மட்டும்தான். என்னோட அசாத்திய நம்பிக்கையாலும், உறுதியான நிலைப்பாட்டாலும்தான் சௌத்ரி சார் இதை தயாரிச்சார். ‘சூர்ய வம்சம்’ இந்தி, தெலுங்கு, கன்னடம், ஒரியானு அத்தனை மொழிகள்லயும் ரீமேக்காகி சக்சஸ் ஆச்சு. கன்னட ரீமேக் மட்டும் நான் டைரக்ட் பண்ணேன். கன்னடத்தில் விஷ்ணுவர்தன் நடிச்சிருந்தார். இந்தியில் அமிதாப்பச்சன். அமிதாப் ஹீரோவா நடிச்ச கடைசிப் படம் இதுதான். இன்னிக்கும் டிவி-ல அதிக தடவை டெலிகாஸ்ட் ஆன படமும் ‘சூர்யவம்சம்‘ தான்.
சரி விஷயத்துக்கு வர்றேன். சரத் சாரும், தயாரிப்பாளர் சௌத்ரி சாரும் ‘சூர்ய வம்சம் 2’ பண்ற ரெடியா இருக்காங்க. இது விஷயமா என்கிட்ட சௌத்ரி சார்கூட பேசினார். ஆனா, பார்ட் 2க்காக கதை ரெடியாகல. முழுக்கதையும் ரெடியான சொல்றேன்னு அவர்கிட்ட சொல்லியிருக்கேன்” என்கிறார் இயக்குநர் விக்ரமன்.