தற்போதுள்ள தொழில் சட்டத்தில் மேற்கொள்ளப்படும் திருத்த முயற்சிக்கு தமது அமைப்பு ஒத்துழைப்பு வழங்கும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒருங்கிணைந்த தொழிலாளர் சட்டத்தைத் தயாரிப்பதற்காக அவசிய பூரண சட்ட ஒத்துழைப்பை வழங்குவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, தொழிலாளர் சட்டத்தை மாற்றுதல் தொடர்பாக தொழில் அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் அபிப்பிராயத்தைப் பெறும் அமர்வில் இணைந்து கொண்டு, சட்டத்தரணிகள் சங்கத்தின் தொழிலாளர் சட்டம் தொடர்பான ஆலோசகர் சட்டத்தரணி கனிஷ்க வீரசிங்க தெரிவித்தார்.
தொழிலாளர் சட்டத்தை விரைவாக மாற்ற வேண்டும் என்றும், அது நாட்டின் அபிவிருத்திக்கு மற்றும் பொருளாதாரத்திற்கு நேரடியாக செல்வாக்குச் செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். புதுப்பிக்கப்பட்ட தொழிலாளர் சட்டத்தின் ஊடாக நிலைபேறான தொழிலாளர்களுக்கு ஒத்துழைப்பை வழங்கும் சூழலை உருவாக்குவதற்கான இயலுமை கிடைக்கும் என்றும், தொழிலாளர்களின் நலன்புரி மற்றும் மிகவும் சிறந்த வாழ்க்கை நிலையை ஏற்படுத்துவதற்கு சந்தர்ப்பம் கிடைப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு, இளம் சுயதொழில் துறையினர் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டு புதிய தொழிலாளர் சட்டத்தை மற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
தொழிலை நிறைவு செய்யும் சட்டம் போன்ற காலம் கடந்த சட்டங்களை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சட்டத்தரணி கனிஷ்க வீரசிங்க கோரிக்கை விடுத்தார்.
இதன்போது தொழில் மற்றும் வெளிநாட்டுத் தொழில்வாய்ப்பு அமைச்சர் மனூஷ நாணயக்கார, தெரிவிக்கையில், தொழிலாளர்களின் எதிர்கால நலன் மற்றும் பாதுகாப்பிற்காக பழமை வாய்ந்த தொழிலில் ஈடுபடுபவர்களுக்குப் பதிலாக எதிர்கால சிந்தனையுடைய பயனாளர்களை உருவாக்குவதற்குத் தேவையான சகல சட்ட மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகளை அறிமுகப்படுத்துவதற்கு தயாராக இருப்பதாக உடன்பட்டமை குறிப்பிடத்தக்கது.