புதுடில்லி டில்லி பல்கலையில் உள்ள ஆண்கள் விடுதிக்கு சென்ற விவகாரத்தில், காங்., முன்னாள் எம்.பி., ராகுலுக்கு, பல்கலையின் விடுதி காப்பாளர் நேற்று ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளார்.
டில்லி பல்கலைக்கு சமீபத்தில் ‘விசிட்’ அடித்த காங்., முன்னாள் எம்.பி., ராகுல், அங்குள்ள முதுகலை ஆண்கள் விடுதிக்கு சென்று மதிய உணவு அருந்தியபடி மாணவர்களுடன் சில மணி நேரம் உரையாடினார்.
இந்த சம்பவம் நடந்த மறுதினமே, அவரின் வருகைக்கு அதிருப்தி தெரிவித்த பல்கலை நிர்வாகம், இங்கு அரசியல் செயல்பாடுகளுக்கு இடமில்லை என தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் டில்லி பல்கலை முதுநிலை ஆண்கள் விடுதியின் காப்பாளர் நேற்று ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
இதில் கூறப்பட்டுஉள்ளதாவது:
காங்., முன்னாள் தலைவர் ராகுல் மூன்று வாகனங்களுடன் பல்கலை வளாகத்திற்குள் திடீரென வந்தது, பல்கலை விதிகளுக்கு எதிரானது. மாணவர்களின் நலனுக்காக பல்வேறு விதிகள் வகுக்கப்பட்டுள்ள நிலையில், இது போல் அத்துமீறி நுழைந்தது பொறுப்பற்ற நடத்தையைக் காட்டுகிறது.
ஒரு தேசியக் கட்சித் தலைவரின் இந்த நடவடிக்கை, கண்ணியத்துக்கு அப்பாற்பட்டது. இதனால், விடுதியில் இருந்த மாணவர்கள், பல்கலை ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
அவர்களின் நலன் பல்கலைக்கு முக்கியம் என்பதால், எதிர்காலத்தில் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்த விவகாரத்தில் ராகுல் மீது நடவடிக்கை எடுக்க நெருக்கடி தரப்படுவதாக இந்திய மாணவர் சங்கத்தின் காங்., பிரிவு குற்றஞ்சாட்டிய நிலையில், இதை பல்கலை நிர்வாகம் மறுத்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்