இஸ்லாமாபாத்: இம்ரான் கானை கைதை தொடர்ந்து பாகிஸ்தானில் மிகப் பெரிய வன்முறை ஏற்பட்டுள்ள நிலையில், இது குறித்து பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நேற்று முன்தினம் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு வந்தார். அப்போது அவரை பாகிஸ்தானின் துணை ராணுவ படையினர் கைது செய்தனர்.
இம்ரான் கான் காதர் அறக்கட்டளை வழக்கில் கைது செய்யப்பட்டார்.. பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-இன் டாப் தலைவர் மீது இம்ரான் கான் சமீபத்தில் பரபர குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அவர் இந்த கருத்தைக் கூறி 24 மணி நேரத்தில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இம்ரான் கான்: கடந்தாண்டு வரை பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்தவர் இம்ரான் கான். இருப்பினும், கூட்டணி கட்சியினரே அவருக்கு எதிராகத் திரும்ப இம்ரான் கான் தனது பிரதமர் பதவியை இழந்தார். அவர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இருப்பினும், அந்த வழக்குகளில் அவர் கைதாகாமல் பார்த்துக் கொண்டார்.
இந்தச் சூழலில் தான் நேற்று முன்தினம் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக நேரில் ஆஜராகப் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அப்போது பாகிஸ்தான் துணை ராணுவ படையினர் நீதிமன்ற வளாகத்திலேயே வைத்து இம்ரான் கானை கைது செய்தனர். அவரை அத்துமீறி கைது செய்ததாக அவரது பிடிஐ கட்சியினர் சாடினர். இம்ரான் கான் கைது செய்யப்படும் வீடியோவும் இணையத்தில் டிரெண்டானது.
பெரும் பரபரப்பு: இதையடுத்து அங்கே நாடு முழுக்க போராட்டங்கள் கிளம்பியது. பாகிஸ்தான் அரசைக் கண்டித்து போராட்டம் நடத்திய இம்ரான் கான் ஆதரவாளர்கள், சில இடங்களில் வன்முறையும் ஈடுபட்டனர். இதனால் பாகிஸ்தான் முழுக்க பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சில இடங்களில் உயிரிழப்புகளும் கூட ஏற்பட்டன. இப்படி இம்ரான் கான் கைதை தொடர்ந்து பாகிஸ்தான் முழுக்க வன்முறை போராட்டங்கள் நடந்து வருகிறது.
இதற்கிடையே பிடிஐ தலைவர் இம்ரான் கான் கைதை எதிர்த்து அங்கே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே பாகிஸ்தான் ஊழல் அமைப்பால் இம்ரான் கான் கைது செய்யப்பட்டிருப்பது சட்டவிரோதமானது என்றும் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இம்ரான் கான் இப்போது ஊழல் ஒழிப்பு அமைப்பின் காவலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றம் கருத்து: இம்ரான் கானை விடுவிக்க வேண்டும் என்ற உத்தரவை நீதிபதி உமர் அதா பண்டியல், நீதிபதி முகமது அலி மசார் மற்றும் நீதிபதி அதர் மினல்லா ஆகியோர் கொண்ட பெஞ்ச் பிறப்பித்துள்ளது. மேலும், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து இம்ரான் கான் கைது செய்ததை சுப்ரீம் கோர்ட் கடுமையாக விமர்சித்துள்ளது.
இம்ரான் கானை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் அதன் பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை உயர் நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
கைது செய்யக் கூடாது: மேலும், பதிவாளரின் அனுமதியின்றி நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஒருவரைக் கைது செய்ய முடியாது என்றும் தலைமை நீதிபதி பண்டியல் தெரிவித்தார். மேலும், ஒரு நபர் நீதிமன்றத்தில் சரணடைந்த பிறகு, அவரை கைது செய்வதன் அர்த்தம் என்ன என்றும் கேள்வி எழுப்பினர். முன்னதாக காவலில் தான் சித்திரவதை செய்யப்பட்டதாகவும், கழிவறையைக் கூட பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை என்றும் இம்ரான் கான் கூறியிருந்தார்.