வேலூர்: ”தமிழ்நாட்டில் கஞ்சா 4.0 வேட்டையில் பெரிய கஞ்சா சப்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்” என்று சட்டம் ஒழங்கு கூடுதல் டிஜிபி சங்கர் தெரிவித்தார்.
வேலூர் சரக காவல் துறை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குழுக்கள் கலந்தாய்வு கூட்டத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜபி சங்கர் இன்று (ஜூன்-11) பங்கேற்றுப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”இரண்டு நாள் ஆய்வின் ஒரு பகுதியாக திருவண்ணாமலையில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது. பொதுவாக பல்வேறு இடங்களில் இருந்து வரும் மனுக்கள், கடந்த இரண்டு மாதங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டதா? என்று ஆய்வு செய்தோம். தீர்க்க முடியாமல் இருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல், நிலப் பிரச்சினைகளில் தீர்வு காண முடியாது. அதேநேரம், எங்கள் தரப்பில் அவற்றை முடிக்க முயற்சி செய்யப்படும். இல்லாவிட்டால் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இரண்டு நாள் ஆய்வில் குற்ற நிகழ்வுகளை குறைக்க கடந்த 3, 4 ஆண்டுகளில் நடைபெற்ற கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் ஆய்வு செய்யப்படுகிறது. அதில் இருக்கும் குறைபாடுகள் தீர்க்கப்படுகிறது. வேலூரில் இ-பீட் நடைமுறை, சோதனைச்சாவடிகள் ஆய்வு செய்யப்பட்டது. கிறிஸ்டியான்பேட்டையில் புதிய சோதனைச்சாவடி கட்டப்பட்டு வருகிறது. கண்காணிப்பு கேமராக்கள், தடுப்புகள் உள்ளன. காவலர்கள் போதுமான அளவுக்கு உள்ளனர். வேலூரைப் பொறுத்தவரை கண்காணிப்பு கேமரா வசதி நன்றாக இருக்கிறது.
தமிழகத்தில் ரவுடிகளை கட்டுப்படுத்த முக்கிய இலக்காக வைத்துள்ளோம். ரவுடிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அவர்களின் வீட்டை கண்காணிக்கிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்கிறோம். பழைய வழக்குகள் ஆய்வு செய்யப்பட்டு நிலுவையில் இருக்கும் பிடியாணைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கொலை வழக்குகளை குறைக்க நடவடிக்கை எக்கிறோம்.
பொதுமக்களுக்கு காவல் துறை சேவையின் தரம் உயர்த்தப்படும். காவல் துறை பொதுவாக மேற்கொள்ளும் பணிகளை 20 வகைப்பாட்டுடன் பிரித்து கண்காணிக்கப்படும். குற்றங்கள் அதிகம் நடைபெறும் இடங்களைக் கண்டறிந்து அங்கு காவலர்களின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் காவல் துறையின் செயல்திறன் அதிகரிக்கும். குறிப்பாக இ-பீட் தொழில்நுட்பத்தால் காவலர்கள் ரோந்து பணியை உயர் அதிகாரிகள் எந்த நேரத்திலும் கண்காணிக்க முடியும்.
காவல் நிலைய வரவேற்பாளர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும். அதில், புகார் மனுக்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படும். இதனால், புகார் வரவில்லை போன்ற பிரச்சினைகள் எதுவும் இருக்காது. தமிழ்நாட்டில் கஞ்சா 4.0 வேட்டை நடைபெறுகிறது. இதில் பெரிய கஞ்சா சப்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதுவரை நடத்தப்பட்ட கஞ்சா வேட்டையில் முக்கிய குற்றவாளிகள், சப்ளையர்கள், வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போதுகூட இலங்கைக்கு கடக்க முயன்ற 2 ஆயிரம் கிலோ கஞ்சாவை மதுரையில் பறிமுதல் செய்துள்ளோம். இதேபோல், வேறு பெரிய கடத்தலை பிடிக்க காத்திருக்கிறோம். கஞ்சா கடத்தலை தடுக்க நமது ஆட்கள் ஆந்திராவில் முகாமிட்டு தகவல்களை அளித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்குக்குப் பிறகு இ-பீட் நடைமுறை அதிகப்படுத்தி உள்ளோம். குறிப்பாக சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் இதுபோன்ற கொள்ளை சம்பவம் நடைபெறுகிறது. சனிக்கிழமை ரோந்து பணியும் மாதத்தில் இரண்டு சனிக்கிழமைகளில் ஐஜிக்கள் அளவில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.