\"கைது டூ ரிலீஸ்..\" 48 மணி நேரத்தில் கெத்து காட்டிய இம்ரான் கான்.. பற்றி எரிந்த பாகிஸ்தான்! என்னாச்சு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வெறும் 48 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டு, ரிலீசும் செய்யப்பட்டார். ஆனால், இந்த இரண்டு நாட்களில் பாகிஸ்தானே ரணகளம் ஆகிவிட்டது.

கடந்தாண்டு வரை பாகிஸ்தான் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான்.. பாகிஸ்தான் 1947இல் சுதந்திரம் அடைந்தது முதல் அங்கே எந்தவொரு பிரதமரும் பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்தது இல்லை.

ஒன்று ராணுவம் வந்து ஆட்சியைப் பிடிக்கும்.. இல்லையென்றால் அரசியல் குழப்பம் ஏற்பட்டு அரசு கவிழும். அந்தப் பட்டியலில் இம்ரான் கானும் கடந்தாண்டு இணைந்தார். இப்போது இவரும் இணைந்தார்.

உலகக் கோப்பை: பாகிஸ்தானின் செல்வச் செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்த இம்ரான் கான், கிரிக்கெட்டில் தலைசிறந்து இருந்தார். குறிப்பாக 1992இல் பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் உலகக் கோப்பை பெற்றுத் தந்தார். இதன் மூலம் அவர் ஒட்டுமொத்த பாகிஸ்தான் நாட்டிற்கு ஹீரோவாக மாறினார். அதன் பின் கட்சியை ஆரம்பித்த இம்ரான் கான், தொடர்ந்து அரசியலில் இருந்தார். இருப்பினும், அவரால் 2018இல் தான் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது.

அப்போதும் கூட அவருக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடனேயே இம்ரான் கான் ஆட்சியைப் பிடித்தார். தொடக்கத்தில் சில காலம் ஆட்சி நன்றாகவே போய் கொண்டிருந்தது. பாகிஸ்தானில் ராணுவத்தைப் பகைத்த யாரும் ஆட்சியில் நீட்டித்தது இல்லை. அங்கே ராணுவம் அந்தளவுக்கு வலிமையானது. அது போல தான் இம்ரான் கானுக்கு அந்நாட்டு ராணுவ தலைமையுடன் மோதல் ஏற்பட்டது. அதன் பிறகு எல்லாம் மின்னல் வேகத்தில் நடந்து முடிந்தது.

இம்ரான் கான்: ஒரு பக்கம் கூட்டணி கட்சியினரே வரிசையாக ஆதரவை விலக்கிக் கொண்டனர். நீதிமன்றம் சென்ற போதும், அவருக்கு ஆதரவாகத் தீர்ப்பு வரவில்லை. இதனால் கடந்தாண்டு அவர் தனது பிரதமர் பதவியை இழந்தார். பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட உடனேயே, இம்ரான் கான் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.. இருப்பினும், அதில் கைதாவதை இம்ரான் கான் தவிர்த்தே வந்தார்.

இந்தச் சூழலில் நேற்று முன்தினம், அவர் மற்றொரு வழக்கு ஒன்றின் விசாரணைக்காக இஸ்லாமாபாத் ஐகோர்ட்டிற்கு வந்தார். அப்போது நீதிமன்ற வளாகத்திலேயே வைத்து அவரை துணை ராணுவ படையினர் கைது செய்தனர். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பகீர் கிளம்பியது. இம்ரான் கான் காதர் அறக்கட்டளை வழக்கில் கைது செய்யப்பட்டார். 70 வயதான இம்ரான் கானை அத்துமீறி கைது செய்ததாக அவரது பிடிஐ கட்சியினர் கடுமையாகச் சாடினர்.

பற்றி எரிந்த நகரங்கள்: பாகிஸ்தான் உளவு அமைப்பை அவர் சாடிய 24 மணி நேரத்தில் இந்த கைது நடந்து பரபரப்பைக் கிளப்பியது. இதற்கிடையே இம்ரான் கைதை கண்டித்து அவருக்கு ஆதரவாகப் பாகிஸ்தான் முழுக்க மிகப் பெரியளவில் போராட்டம் நடைபெற்றது. நாடு முழுக்க போராட்டம் நடத்தி பிடிஐ கட்சியினர் அழைப்பு விடுத்தனர். சில இடங்களில் இதில் வன்முறை ஏற்பட்டு உயிரிழப்புகளும் கூட ஏற்பட்டன.

குறிப்பாக ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்திலும் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். லாகூர் கான்ட்டில் உள்ள கார்ப்ஸ் கமாண்டரின் வீட்டிற்குள் நுழைந்தும் அங்கிருந்த பொருட்களைப் போராட்டக்காரர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். அதேபோல ரேடியோ பாகிஸ்தான் அலுவலகமும் சூறையாடப்பட்டது. இப்படி அங்கே நடந்த போராட்டங்கள் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.

நீதிமன்றம் அளித்த தீர்ப்பு: இதற்கிடையே முதலில் இம்ரான் கான் கைதை எதிர்த்து ஐகோர்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அதில் இம்ரான் கானுக்கு எதிரான தீர்ப்பே வந்தது. இதையடுத்து அவர்கள் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணையில் ஆஜரான இம்ரான் கான், “உயர்நீதிமன்றத்தில் இருந்து நான் கடத்தப்பட்டேன், தடிகளை கொண்டு என்னைத் தாக்கினர். குற்றவாளியைக் கூட இப்படி நடத்த மாட்டார்கள். எனக்கு எதுவும் தெரியாது, எதற்காக இப்படிச் செய்தார்கள் எனப் புரியவில்லை. என்னைக் கைது செய்ய வேண்டும் என்றால் எனக்கு வாரண்ட் தந்திருக்கலாம்” என்று தெரிவித்தார்.

அவர் தரப்பு வாதங்களைக் கேட்ட பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், அவர் கைது செய்யப்பட்டது சட்ட விரோதமானது எனத் தீர்ப்பளித்தது. மேலும், அவரை உடனடியாக ரிலீஸ் செய்யவும் பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.