திருவனந்தபுரம்:
கேரளாவில் பெண் மருத்துவர் ஒருவர் விசாரணைக் கைதியால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட அதே நாளில் மற்றொரு இடத்தில் மருத்துவர் மீது கொலை வெறி தாக்குதல் நடந்திருக்கும் விஷயம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, கேரள அரசு ஒரு அதிரடி அவசர சட்டத்தை இயற்றி வருகிறது. இது விரைவில் அமலுக்கு வரவுள்ளது.
கேரளாவில் நேற்று நடந்த ஒரு சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி இருக்கிறது. கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டாரக்கரை தாலுகா மருத்துவமனைக்கு அதிகாலை நேரத்தில், சந்தீப் என்ற 41 வயது ஆசிரியரை போலீஸார் கைது செய்து அழைத்து வந்தனர். போதையில் தகராறு செய்ததாக கூறி அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். லேசாக காயமடைந்த அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டி, அந்த மருத்துவமனைக்கு அவர் அழைத்து வரப்பட்டிருந்தார்.
அப்போது வந்தனா தாஸ் (25) என்ற பெண் மருத்துவர், அவருக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில், திடீரென சந்தீப் அங்கிருந்த கத்தரிக்கோலை எடுத்து வந்தனாவை பல இடங்களில் சரமாரியாக குத்தினார். இதில் அந்த அப்பாவி பெண் மருத்துவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மற்றொரு சம்பவம்:
மருத்துவர் வந்தனா கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் மருத்துவர்கள் கேரளாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த சூழலில், அதே நாளில் மற்றொரு பயங்கர சம்பவமும் நடந்திருக்கிறது. இடுக்கி மாவட்டத்தில் உள்ள நெடும்கண்டம் பகுதியில் ஒரு அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. அங்கு பிரவீன் என்ற இளைஞரை கைது செய்து போலீஸார் அழைத்து வந்தனர்.
கொலைவெறி தாக்குதல்:
அப்போது அவருக்கு வழக்கமான மருத்துவப் பரிசோதனையை மருத்துவர்கள் செய்த போது, அங்கிருந்த இரும்புக் கம்பியை எடுத்து மருத்துவர்களையும், செவிலியர்களையும் பிரவீன் தாக்கி இருக்கிறார். இதில் 2 மருத்துவர்கள், 2 செவிலியர்கள் பலத்த காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்த தகவல் இன்று காலை வெளியானதால் கேரளாவில் உள்ள மருத்துவர்கள் அதிர்ச்சியிலும், அச்சத்திலும் உறைந்தனர்.
ரெடியாகும் அவசர சட்டம்:
தங்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் தராத வரை, பணிக்கு செல்ல மாட்டோம் எனக் கூறி பல அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் பினராயி விஜயன், ஏற்கனவே இருக்கும் மருத்துவர்கள் பாதுகாப்பு சட்டத்தில் கூடுதலாக சில அம்சங்களை சேர்த்து அவசர சட்டத்தை இயற்றுமாறு உத்தரவிட்டுள்ளார்.
அதிரடி அம்சங்கள்:
இதையடுத்து, பணியில் உள்ள மருத்துவர்களை தாக்கினால் கடுமையான தண்டனை அளிக்க வகை செய்யும் அம்சங்கள் இதில் சேர்க்கப்பட்டு வருகின்றன. மேலும், அரசு மருத்துவமனைகளுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கும் வகையிலும், மருத்துவர்களை தாக்கினால் ஒரு மணிநேரத்திற்குள் எப்ஐஆர் பதிவு செய்யும் வகையிலுமான விஷயங்கள் அதில் சேர்க்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், மருத்துவர்களை தாக்குபவர்கள்,ஜாமீனில் வெளிவர முடியாத வகையிலும் அம்சம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அவசர சட்டம் விரைவில் அமலுக்கு வரும் எனக் கூறப்படுகிறது.