புதுடில்லி:புதுடில்லியில் உள்ள ஸ்ரீ சித்தி புத்தி அம்பாள் சமேத கற்பக விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது.
புதுடில்லியின் சரோஜினி நகரில் ஸ்ரீ சித்தி புத்தி அம்பாள் சமேத கற்பக விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இதன் கும்பாபிஷேகம் நேற்று பக்தர்கள் முன்னிலையில் வெகுவிமரிசையாக நடந்தது.
1961ஆம் ஆண்டு புதுதில்லி சரோஜினி நகர் பகுதியில் துவங்கப்பட்ட ஸ்ரீ சித்தி புத்தி விநாயகர் ஆலயம், 62 ஆண்டுகள் பழமையானது.
ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் நடந்து வருகிறது. அந்த வகையில், ஆறாவது கும்பாபிஷேகம் நேற்று சிறப்பாக நடந்தது.
ஸ்ரீ சித்தி புத்தி அம்பாள் சமேத கற்பக விநாயகர், பக்த ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள் சன்னிதிகளின் மேல் அமைந்துள்ள கோபுர கலசங்களுக்கு, கும்பகோணம் பிரம்மஸ்ரீ சேனாபதி சாஸ்திரிகள் தலைமையிலான வேத விற்பன்னர்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து அனைத்து சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன. மகா கும்பாபிஷேகத்தை ஒட்டி கடந்த திங்கட்கிழமை முதல் நாள்தோறும் சிறப்பு ஹோமங்கள் நடந்தன.
விழாவில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், சட்டக்குழுத் தலைவர் ரித்துராஜ் அவஸ்தி, லாரன்ஸ் சாலை பிள்ளையார் கோவில் நிர்வாகி சிவராமகிருஷ்ணன், ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் நிர்வாகி கணேசன், துவாரகா ஸ்ரீ ராமர் கோவில் நிர்வாகி விஸ்வநாதன், தில்லி தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவர் கே வி கே பெருமாள், பிள்ளையார் கோவில் ஆலோசகர் டி.எஸ்.ஆர். மூர்த்தி சண்முகானந்த சங்கீத சபா கிருஷ்ணசாமி, ‘குமரன் சில்க்ஸ்’ சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்று தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு குமரன் சில்க்ஸ் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சித்தி புத்தி விநாயகர் கோவில் செயலர் பி.கல்யாணராமன், அறங்காவலர் ஆர். மகாதேவன், பொருளாளர் ஆர்.பி. ரெங்கநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement