புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் லெத்போரா பகுதியில் உள்ள சிஆர்பிஎப் முகாம் மீது கடந்த 2017-ம் ஆண்டு தாக்குதல் நடத்திய தீவிரவாதி ஃபயஸ் அகமது உட்பட காஷ்மீர் தீவிரவாதிகளின் சொத்துகளை தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) முடக்கியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் லெத்போரா பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ்படையின்(சிஆர்பிஎப்) பயிற்சி மையம் உள்ளது. இங்கு கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 30-ம்தேதி 3 தீவிரவாதிகள் கையெறிகுண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். அப்போது இருதரப்பினர் இடையே 10 மணி நேரத்துக்கும் மேலாக சண்டை நீடித்தது. இதில் 5 வீரர்கள் உயிரிழந்தனர். 3 வீரர்கள் காயம் அடைந்தனர். சிஆர்பிஎப் வீரர்களின் பதில் தாக்குதலில் 3 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் புல்வாமா கிராமத்தைச் சேர்ந்த ஃபயஸ் அகமது. இவரை என்ஐஏ கைது செய்தது.
காஷ்மீரில் 6 கடைகள்: இவருக்கு சொந்தமாக காஷ்மீரில் 6 கடைகள் உள்ளன. அவற்றை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் என்ஐஏ முடக்கியுள்ளது. சிஆர்பிஎப் பயிற்சி மையம் மீதான தாக்குதல் தொடர்பாக மேலும் 3 தீவிரவாதிகள் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
தீவிரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க, காஷ்மீர் தீவிரவாதிகள் பலரின் சொத்துகளை என்ஐஏ முடக்கியுள்ளது. ஹிஸ்புல் தீவிரவாதிகள் தவுலத் அலி முகல், இசாக் பாலா ஆகியோரது அசையா சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. இவர்கள் காஷ்மீரில் பல்வேறு தீவிரவாத சதித் திட்டங்களில் ஈடுபட்டனர். தவுலத் அலி முகலுக்கு காஷ்மீரில் 3 இடங்களில் சொத்துகள் இருந்தன. இசாக் பாலாவுக்கு சோபியான் பகுதியில் சொத்துகள் இருந்தன. இவற்றையும் என்ஐஏ முடக்கியுள்ளது.