சென்னை: ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ஃபர்ஹானா திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஃபர்ஹானா என்ற இஸ்லாமிய பெண் கேரக்டரில் நடித்துள்ளார்.
ஃபர்ஹானா படத்தின் ட்ரெய்லரில் இடம்பெற்ற சில காட்சிகள் சர்ச்சையானதால், இஸ்லாமியர்கள் மத்தியில் எதிர்ப்பு காணப்பட்டது.
இந்நிலையில், இந்தத் திரைப்படம் குறித்து எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் விளக்கம் கொடுத்துள்ளார்.
ஃபர்ஹானா படத்தின் சர்ச்சைகளுக்கு மனுஷ் விளக்கம்:ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிச்சன், சொப்பன சுந்தரி ஆகிய படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் தான் முதன்மையான கேரக்டரில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்துள்ள திரைப்படம் ஃபர்ஹானா. நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள இந்தப் படம் நாளை (மே.12) வெளியாகிறது.
ஐஸ்வர்யா ராஜேஷுடன் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் ஃபர்ஹானா படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் வெளியான ஃபர்ஹானா படத்தின் ட்ரெய்லர் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. ஃபர்ஹானா என்ற முஸ்லிம் பெண்ணாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், கவர்ச்சியான காட்சிகளில் நடித்துள்ளதாக விமர்சனம் எழுந்தது.
மேலும், இந்தப் படத்தில் இஸ்லாமியர்கள் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களது வாழ்வியல் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாகவும் ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன. முக்கியமாக அடுத்தடுத்து வெளியான புர்கா, தி கேரளா ஸ்டோரி திரைப்படங்களில், இஸ்லாமியர்கள் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டிருந்ததால் ஃபர்ஹானா வெளியாகும் முன்பே அதனை தடை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.
மேலும், சமூக வலைத்தளங்களிலும் ஃபர்ஹானா படத்திற்கு எதிராக கருத்துகள் பகிரப்பட்டன. இந்நிலையில், ஃபர்ஹானா படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்துவிட்டு எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் விளக்கம் கொடுத்துள்ளார். இதுகுறித்து தனது முகநூலில் பதிவிட்டுள்ள அவர், “ஃபர்ஹானா படத்தின் சிறப்புக் காட்சி படக்குழுவினருக்கு திரையிடப்பட்டது. தியேட்டர் வாசலில் ஐஸ்வர்யா ராஜேஷிடம் படத்தில் எனது வசனங்களுக்கும் அவரது நடிப்புக்கும் இடையே நடந்த பெரும்போட்டியைப் பற்றி கூறினேன். மிகவும் மகிழ்ச்சியுடன் உரையாடிக்கொண்டிருந்தார்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “ஃபர்ஹானா இஸ்லாமிய கலாச்சாரப் பின்புலத்தை மிக மிக கண்ணியமாக காட்டும் படம் என்பதை வெள்ளிக்கிழமை எல்லோரும் உணர்ந்துகொள்வார்கள். கேரளா ஸ்டோரீஸ் போன்ற மோசமான நோக்கம் உடைய படத்தோடு ஃபர்ஹானாவை இணைத்து பேசுவது தவறான புரிதலின் அடிப்படையில் எழுந்த ஒரு விபத்து. நம் எதிர்ப்புகள் எதிர்க்கப்படவேண்டியவற்றின் மேல்மட்டும்தான் இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
அதேபோல், “இயக்குநர் நெல்சன் வெங்கடேஷ் திருவல்லிக்கேணி இஸ்லாமிய மக்களின் வாழ்வியலை ஒரு அழகிய சித்திரமாக்கியிருக்கிறார். எல்லாவற்றையும்விட women empowerment குறித்த ஒரு வலுவான படைப்பாக இப்படம் உருவாகியிருக்கிறது. இஸ்லாமிய மக்களை புரிதலற்ற முரடர்களாக காட்டும் ஸ்டீரியோ டைப் படங்களுக்கு நடுவே அவர்கள் வாழ்வியலில் நிறைந்திருக்கும் அன்பும் நெகிழ்வுத்தன்மையும் அழகாக சித்தரிக்கப்படும் இந்தப் படத்தை இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, இஸ்லாமியர்கள் மேல் தப்பெண்ணம்கொண்ட அனைவரும் காணவேண்டும்” என கூறியுள்ளார்.
மனுஷ்யபுத்திரனின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. சமீபத்தில் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படம், கேரளாவில் 32000 பெண்கள் முஸ்லிமாக மதமாற்றம் செய்யப்பட்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்தப்படுவதாக சித்தரிக்கப்பட்டிருந்தது. மேலும், படம் முழுக்க இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்தியல்களோடு வசனங்களும் காட்சிகளும் கட்டமைக்கப்பட்டிருந்தன. இதனால், ஃபர்ஹானா திரைப்படமும் அப்படி இருக்குமோ என இஸ்லாமியர்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஃபர்ஹானா திரைப்படம் குறித்து எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் விளக்கம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ஃபர்ஹானா திரைப்படம் எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல என்று தயாரிப்பு நிறுவனம் சார்பிலும் விளக்கம் கொடுத்து அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.