டுவிட்டருக்கு புதிய தலைமை நிர்வாகி நியமனம்..!! எலான் மஸ்க் அறிவிப்பு

வாஷிங்டன்,

சமூக ஊடகங்களில் ஒன்றான டுவிட்டர் நிறுவனம் குறுஞ்செய்திகளை தங்களுக்குள் மக்கள் அனுப்பி, பகிர்ந்து கொள்ளும் நோக்கோடு உருவானது. பின்னர், சிறிய அளவிலான வீடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை அனுப்பி, பரிமாறி கொள்ளும் வகையில் அதன் செயல்பாடுகளில் விரிவாக்கம் செய்யப்பட்டன.

இதன் தலைமை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ.) செயல்பட்டு வந்த ஜாக் டோர்சி கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 29-ந்தேதி பதவி விலகினார். இதனை தொடர்ந்து, டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால் நியமனம் செய்யப்பட்டார்.

10 ஆண்டுகளுக்கு முன்னர் டுவிட்டர் நிறுவனத்தில் பணியில் சேர்ந்த, இந்தியா வம்சாவளியான பராக் அகர்வால் மும்பை ஐ.ஐ.டி.யில் படித்தவர். இதன்பின்னர், உலகின் மிகப்பெரிய பணக்காரரும் டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க், கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளரானார்.

அதற்கான ஒப்பந்தம் முடிந்தவுடன் எலான் மஸ்க் டுவிட்டரின் உயர் அதிகாரிகளை அதிரடியாக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார். குறிப்பாக டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி (சி.இ.ஓ.) பராக் அகர்வால் மற்றும் தலைமை நிதி அதிகாரி நெட் செகல், டுவிட்டர் சட்ட மற்றும் கொள்கை நிர்வாகி விஜய காடே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த சூழலில் டுவிட்டருக்கான சி.இ.ஓ. பதவி காலியான நிலையில், அதற்கான புதிய நபரை தேடும் பணியை எலான் மஸ்க் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் புதிய டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரியை தேர்வு செய்துள்ளதாக (அந்த நபரின் பெயரை குறிப்பிடாமல்) எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “டுவிட்டருக்கு புதிய தலைமை நிர்வாக அதிகாரியை நியமித்துள்ளேன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் 6 வாரங்களில் பணியை தொடங்குவார்.. தயாரிப்பு, மென்பொருள் மற்றும் சிஸ்டம் ஆபரேட்களை மேற்பார்வையிடும், நிர்வாகத் தலைவர் & சிடிஓ ஆக எனது பங்களிப்பு மாறும்” என்று அதில் எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.