பெங்களூரு:-
அமெரிக்காவில் கம்ப்யூட்டர் என்ஜினீயர்
கர்நாடக மாநிலம் தாவணகெரே பகுதியில் வசித்து வருபவர் ராகவேந்திரா கமலாகர ஷெட். இவர், அமெரிக்காவில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். கடந்த 12 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். ஆனாலும் அவர் அமெரிக்க நாட்டு குடியுரிமையை பெறவில்லை. மாறாக நாடாளுமன்றம், சட்டசபை தேர்தலின் போது அமெரிக்காவில் இருந்து தாவணகெரேவுக்கு வந்து வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்றி வந்திருந்தார்.
அதன்படி, நேற்று முன்தினம் நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போதும் ஓட்டுப்போட ராகவேந்திரா தயாராகி இருந்தார். சமீபத்தில் ஆன்லைன் மூலமாக தனது பெயர் தாவணகெரே வடக்கு சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலில் இருப்பதை அவர் உறுதி செய்து கொண்டார். இதையடுத்து, சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஒரு வார விடுமுறையில் அமெரிக்காவில் இருந்து தாவணகெரேக்கு ராகவேந்திரா வந்திருந்தார்
ஓட்டுப்போடாமல் ஏமாற்றம்
நேற்று முன்தினம் தாவணகெரே வடக்கு தொகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு சென்று அவர் ஓட்டுப்போட சென்றார். ஆனால் வாக்காளர்களின் பட்டியலில் ராகவேந்திராவின் பெயர் இல்லாததால், அவருக்கு ஓட்டுப்போட தேர்தல் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. அவரது பெயர் விடுபட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தேர்தலில் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற அமெரிக்காவில் இருந்து தாவணகெரேக்கு வந்திருந்த ராகவேந்திரா பெரும் ஏமாற்றம் அடைந்தார்.
இதுபற்றி அவர் கூறுகையில், சட்டசபை தேர்தலில் வாக்களிக்க அமெரிக்காவில் இருந்து விமானத்தில் 24 மணிநேரம் பயணம் செய்து சொந்த ஊருக்கு வந்தேன். இதற்காக ரூ.1½ லட்சம் செலவாகி இருந்தது. வாக்களிக்க கிட்டத்தட்ட 14 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்திருந்தேன். தேர்தல் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக என்னால் வாக்களிக்க முடியாததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தேன். எனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருப்பது குறித்து தேர்தல் அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும், என்றார்.