ஓபிஎஸ்: போலிசையே பொளக்கும் திமுகவினர்.. அராஜகத்தை கட்டுப்படுத்த வேண்டும்.!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி ஆளுநர் வரை தொடர்ந்து

அரசை விமர்சித்து வருகின்றனர். ஆனால் காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வரோ, ‘‘தமிழ்நாட்டில் சாதிச் சண்டைகள், கலவரம் இல்லை, கூட்டு வன்முறைகள் இல்லை’’ என கூறிவருகிறார். இந்த சூழலில் ஒ.பன்னீர் செல்வமும் திமுக அரசை கடுமையா சாடியுள்ளார்.

இது குறித்து ஒ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: ‘‘காவல் துறையையே மிரட்டும் சம்பவங்களும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் சம்பவங்களும் திமுகவினரால் நிகழ்த்தப்பட்டு வருவது வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது. அண்மையில், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டப் பிரிவின் கீழ் விசாரணை மேற்கொண்டிருந்த காவல் ஆய்வாளரை, கொளத்துப் பாளையம் நகர திமுக செயலாளர் தனது ஆதரவாளர்களுடன் சென்று, “தொப்பியை கழட்டி விடுவேன், ஜாக்கிரதை” என்று ஆய்வாளரை மிரட்டியுள்ளதாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளது.

இதே திருப்பூர் மாவட்டம், அவிநாசி, நம்பியாம்பாளையத்தில் உள்ள காய் கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் கடையில் தனது ஆதரவாளர்களுடன் நுழைந்த திமுக நிர்வாகி அங்குள்ள கடை உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மிகப் பெரிய ரகளையில் ஈடுபட்டுள்ளார். இது குறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதாவது. தமிழகத்தில் காவல் துறையினரையும், பொதுமக்களையும் மிரட்டும் அளவுக்கு திமுகவின் அராஜகம் கொடிகட்டி பறக்கிறது.

இது ஒருபுறம் என்றால், மறுபுறம் “திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்” என்ற பெயரில், திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ரோடு, பாளையக்காடு பகுதியில் பள்ளிக்கு செல்லும் பாதையை மறித்து திமுக கூட்டத்திற்கு மேடை அமைக்கப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. சாதனை என்ற பெயரில் மக்களுக்கு வேதனையை திமுகவினர் அளித்து வருகின்றனர். இது தவிர மணல் கடத்தல், ரேஷன் பொருட்கள் கடத்தல், போதைப் பொருட்கள் விற்பனை என அனைத்திலும் தி.மு.க.வினரின் அதிகாரம் கொடிகட்டி பறக்கிறது.

இவையெல்லாம் நேற்று பத்திரிகையில் வெளியான செய்திகள். வெளியாகாத செய்திகள் பல உள்ளன. இதுபோன்ற செயல்கள்தான் தமிழகம் முழுவதும் அன்றாடம் நடைபெற்று வருகின்றன. திமுகவினரின் அராஜகத்தை, அத்துமீறல்களை கட்டுப்படுத்தி வைத்தாலே தமிழகத்தின் சட்டம் ஒழுங்குப் பிரச்சனையில் ஐம்பது விழுக்காடு குறைந்துவிடும் என்பது பொதுமக்களின் கருத்தாக இருக்கிறது. எனவே, சட்ட விரோதமாக செயல்படுபவர்கள் மீது, காவல் துறையையே மிரட்டுபவர்கள் மீது, கட்சி வித்தியாசமின்றி கடும் நடவடிக்கை எடுத்து, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட வேண்டுமென்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்’’ என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.