மதுரை: தமிழக அமைச்சரவை மாற்றத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடமிருந்த நிதித் துறை மாற்றப்பட்டிருப்பது திமுகவில் மட்டுமின்றி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசியல் ரீதியாக பாஜகவுக்கும், நிதி விவகாரங்களில் மத்திய அரசுக்கும் கடும் சவாலாக இருந்தவர் பழனிவேல் தியாகராஜன். நிதி சிக்கனத்துக்காக முதல்வர் மு.க.ஸ்டாலினால் பலமுறை பாராட்டப்பட்டவர். இதன் மூலம் ஏறுமுகத்தில் சென்று கொண்டிருந்த பழனிவேல் தியாகராஜனிடம் இருந்து ஏன் திடீரென நிதித் துறை பறிக்கப்பட்டது? என்ற கேள்வியும், விவாதமும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதுகுறித்து திமுக முக்கிய நிர்வாகிகள் கூறியதாவது: திமுக ஆட்சிக்கு வந்த தொடக்கத்தில் பழனிவேல் தியாகராஜன், கட்சியின் தகவல் தொழில்நுட்பச் செயலாளராகவும், நிதி அமைச்சராகவும் செல்வாக்குடன் திகழ்ந்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மருமகன் சபரீசன் ஆகியோருடனான நெருக்கத்தால் மதுரை மாநகராட்சி நிர்வாகத்திலும், மாநகர் கட்சியிலும் இவரது செல்வாக்கு கொடிகட்டிப் பறந்தது. மேயர் தேர்தலில் அமைச்சர் பி.மூர்த்தி, முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம் மற்றும் தளபதி ஆகியோரை ஓரங்கட்டி தனது ஆதரவாளர் இந்திராணியை மேயராக்கினார்.
இதற்கிடையே, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தான் கட்சியில் வகித்து வந்த மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதேநேரத்தில் மதுரை மாநகர் செயலாளர் தேர்தலில் தனது செல்வாக்கைக் காட்ட பழனிவேல் தியாகராஜன் முயன்றார். அது பலனளிக்கவில்லை. இதனால், தனது ஆதரவாளரை மதுரை மாநகர் மாவட்டச் செயலாளராக்க முடியாமல் போனது.
அமைச்சர்கள் அதிருப்தி: இந்நிலையில், ஆட்சி நிர்வாகத்தில் நிதி சிக்கனம் என்ற பெயரில் துறை ரீதியான திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மூத்த அமைச்சர்களுடன் முரண்பாடு ஏற்பட்டது. திமுக பொருளாளரும் அமைச்சருமான துரைமுருகன், அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் `நிதி அமைச்சர் மனது வைத்தால் சில திட்டங்களை நிறைவேற்ற முடியும்’ என சட்டப்பேரவையில் வெளிப்படையாகவே பேசினர்.
அமைச்சர்களின் அதிருப்தி, அரசு ஊழியர்கள் சங்கங்களுடன் நீடித்த பிரச்சினை போன்றவற்றால் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த 2 ஆண்டுகளாகப் பல்வேறு சவால்களைச் சந்தித்ததோடு மட்டுமின்றி சர்ச்சைகளிலும் சிக்கினார்.
அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில்அரசு திட்டங்களைச் செயல்படுத்தாமல் நிதியைக் காரணம் காட்டி தள்ளிவைப்பது கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று மூத்த அமைச்சர்கள் பலர் பழனிவேல் தியாகராஜன் மீது கட்சித் தலைமையிடம் புகார் கூறினர்.
இந்தச் சூழ்நிலையில்தான் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஒரு ஆடியோவை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அது தனது குரல் இல்லை என்று அமைச்சர் மறுத்தாலும், அது தொடர்பாக அவர் சார்பிலோ, திமுக சார்பிலோ ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்விகள் எழுந்தன.
ஒரே சமயத்தில் சபரீசன், உதயநிதியின் நம்பிக்கையை அவர் இழந்துவிட்டார் என்றும் சற்று ஆறப்போட்டு அவர் மீதான கோபம் வெளிப்படுத்தப்படும் என கட்சிக்குள் பரபரப்பாக பேசி வந்தனர். இந்நிலையில்தான் அமைச்சரவை மாற்றத்தில் பழனிவேல் தியாகராஜன் வசமிருந்த நிதித் துறை, தங்கம் தென்னரசு வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
கட்சிப் பதவி ஏதும் இல்லாதது, துறை மாற்றம் போன்ற காரணங்களால் பழனிவேல் தியாகராஜனுக்கு திமுகவில் முக்கியத்துவம் குறைந்துள்ளதோ? என்ற கேள்வி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.