புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா நேற்று பதவியேற்ற நிலையில் ஒரு சில அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றியமைக்கப்பட்டன. பால்வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் மட்டும் நீக்கப்பட்டிருக்கிறார். அமைச்சரவை மாற்றம் தொடர்பாக கடந்த பத்து நாள்களுக்கும் மேலாக அதிக செய்திகள் உலா வந்தன. யார் யாருடைய பதவிக்கெல்லாம் ஆபத்து என்பது குறித்து வெளியான செய்திகளில் இருவரது பெயர்கள் ஹிட் லிஸ்டில் இருந்தன. ஆனால் அந்த இருவரும் கொஞ்சமும் சேதாரம் இல்லாமல் தப்பித்துவிட்டனர்.
யார் அவர்கள்? தப்பித்தது எப்படி?சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனும், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜும் தான் அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இலாக்கா மாற்றம் கூட இல்லாமல் இவர்கள் தப்பித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் கயல்விழிக்கு கூடுதல் போனஸாக வாரியப் பதவியும் சேர்த்து வழங்கப்பட்டது.
ராமச்சந்திரன் பதவிக்கு உருவான சிக்கல்!வனத்துறை அமைச்சராக இருந்த போதே ராமச்சந்திரன் குறித்து சில புகார்கள் மேலிடத்துக்கு சென்றிருந்ததாம். சுற்றுலாத்துறையிலும் அவரது செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அவரது மருமகனின் மேடநாடு எஸ்டேட் விவகாரமும் சேர்ந்து கொள்ள ராமச்சந்திரன் பதவிக்கு சிக்கல் உருவானது. அதன் பின்னர் தான் அவரை மாற்றினால் ஏற்படும் விளைவுகள் குறித்து மேலிடத்துக்கு சொல்லப்பட்டதாம்.
ராமச்சந்திரனை காப்பாற்றிய நீலகிரிமக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு காலமே உள்ளது. ராமச்சந்திரன் செல்வாக்கு செலுத்தும், படுகர் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் நீலகிரி தொகுதியை நோக்கி பாஜகவின் கவனம் அதிகமாக உள்ளது. இந்த தொகுதியில் மூன்று முறை போட்டியிட்டு இரண்டு முறை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆ.ராசா இம்முறையும் இதே தொகுதியில் போட்டியிட வாய்ப்புகள் அதிகம். பாஜகவின் எல்.முருகனும் இதை குறிவைத்து அங்கு தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
நீலகிரியில் செல்வாக்கு!ராமச்சந்திரனை பதவியில் இருந்து நீக்கினால் அவரது ஆதரவாளர்கள் திமுகவுக்கு எதிராக திரும்ப வாய்ப்பு உள்ளது. 2016 சட்டமன்றத் தேர்தலில் ராமச்சந்திரனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் குன்னூரில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தோல்வியைத் தழுவியது தொடர்பான தகவல்கள் எடுத்துச் சொல்லப்பட்ட நிலையில் அவரது பெயர் அடிக்கப்பட்டதாக கூறுகிறார்கள்.
கயல்விழி செல்வராஜ் செயல்பாடு எப்படி?ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக பதவி வகிக்கும் கயல்விழி சிறப்பாக செயல்படவில்லை என்று ரிப்போர்ட் சென்றுள்ளது. வேங்கை வயல் விவகாரம் தமிழக அரசுக்கு மிகப் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது. அதை முறையாக கையாளவில்லை என்பதும் அவர் மீது மேலிடம் அதிருப்தியடைய காரணமாக சொல்லப்படுகிறது. அதோடு குடும்ப உறுப்பினர்களின் தலையீடு துறைக்குள் அதிகம் இருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
கயல்விழியை காப்பாற்றிய தமிழரசிகயல்விழியை பதவியிலிருந்து நீக்கினால் மீண்டும் ஒரு ஆதி திராவிடர் சமூகத்தவருக்கு அந்த பதவி கொடுக்க வேண்டும், அது மட்டுமல்லாமல் அமைச்சரவையில் மொத்தமே இரு பெண் அமைச்சர்கள் தான் உள்ளனர். எனவே ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும், அப்படியானால் முன்னாள் அமைச்சர் தமிழரசி ரவிக்குமார் மட்டுமே இருக்கிறார். அவர் குறித்து சென்ற ரிப்போர்ட் அவ்வளவு திருப்தியாக இல்லாததால் தேவையில்லாத பிரச்சினையை இப்போது கிளப்ப வேண்டாம் என்று கயல்விழியின் ரூட்டை கிளியர் செய்துள்ளனராம்.