சேலம் அருகே உள்ள பரவச உலகம் தீம்பார்க்கில் பள்ளி விடுமுறையை மகிழ்ச்சியுடன் கொண்டாச்சென்ற 13 வயது சிறுவன் குளோரின் அதிகமாக கலக்கப்பட்ட நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலத்தில் இருந்து ராசிபுரம் செல்லும் சாலையில் மல்லூரில் அமைந்துள்ள பரவச உலகம் தீம் பார்க்கில் தான் இந்த விபரீத உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் கிச்சிப்பாளையத்தில் உணவகம் நடத்திவரும் ரஞ்சித் – உஷா தம்பதியருக்கு சவுடேஸ்வரன் , துவேஸ்வரன் ஆகிய இருமகன்கள் இருந்தனர். பள்ளிக்கு கோடை விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த தங்களது இரு மகன்களையும் அழைத்துக் கொண்டு இந்த தம்பதியினர் பரவசம் உலகம் தீப்பார்க்கிறகு சென்றனர். காலையில் அந்த பொழுது போக்கு பூங்காவில் உள்ள தண்ணீர் விளையாட்டு பகுதியில் மேலிருந்து தண்ணீருக்குள் சறுக்கி விளையாடி உள்ளனர்.
அந்த நீச்சல் குளத்தில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரில் குளோரின் அளவுக்கதிகமாக கலக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. சிறிது நேரம் சறுக்கி விளையாடி ஜாலியாக பொழுதை கழித்த சிறுவர்களில் 13 வயது சிறுவனான சவுடேஸ்வரன் திடீர் என மயங்கி நீரில் மூழ்கியதாகவும், அருகில் யாரும் இல்லாததால் அவனை பிடித்து கைத்தூக்கிவிட ஆளில்லை என்று கூறப்படுகின்றது.
தங்கள் மகன் நீரில் மூழ்கியதை அறிந்த பெற்றோர் அவனை தூக்கி கரைக்கு கொண்டு வந்துள்ளனர். சவுடேஸ்வரனுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தும் சுய நினைவு திரும்பாததால் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனைக்கும் தூக்கிச் சென்றனர். சிறுவன் சவுடேஸ்வரனை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
நீரில் விளையாடச்சென்ற தங்கள் வீட்டுப் பிள்ளை சடலமாக வருவதை கண்டு உற்றார் உறவினர்கள் கலங்கி கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இரு பிள்ளைகளுக்கும் சாமி பெயர் விட்டதாகவும், எந்த சாமியும் வந்து காப்பாற்றவில்லையே என்று விரக்தியோடு கண்ணீர் விட்டனர்.
பரவச உலகம் பூங்காவில் போதிய பாதுகாப்பு இல்லை என்று குற்றஞ்சாட்டிய பெற்றோர், தங்கள் மகன் குளித்த இடத்தில் ஆழம் இல்லை எனவும் 3 அடி உயரத்துக்கும் குறைவாகத் தான் தண்ணீர் இருந்ததாகவும் , நீரில் அளவுக்கதிமாக குளோரின் கலக்கப்பட்டதாலும், அந்த தண்ணீரை குடித்ததால் மயக்கம் அடைந்து தங்கள் மகன் உயிரிழந்ததாகவும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக வெண்ணந்தூர் காவல்துறையினர் மர்ம மரணம் என்று வழக்கு பதிவு செய்து சிறுவனின் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து பொழுது போக்கு பூங்கா நிர்வாகத்தினரிடம் விசாரித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் பொழுது போக்கு பூங்காக்களில் உள்ள நீச்சல் குளத்தில் ஏராளமானோர் குளிப்பதால் அந்த தண்ணீர் மூலமாக நோய்கள் பரவக்கூடாது என்பதற்காக குளோரின் உள்ளிட்ட ரசாயணங்கள் கலக்கப்படுவதாகவும், இதில் குளிக்கும் சிறுவர்களுக்கு காதுவலி, தொண்டை வலி உள்ளிட்ட உபாதைகள் ஏற்படும் என்றும், இந்த குளோரின் தண்ணீரை அதிக அளவு குடித்தால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சிறுவனின் இந்த விபரீத மரணம் அவரது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.