சென்னை: நமக்கு நாமே திட்டத்தின் கீழ், நகர்ப்புற உள்ளாட்சிகளில் மக்கள் தொகையில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக பட்டியலின, பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில், பொதுமக்களின் பங்களிப்புத் தொகையை 20 சதவீதமாக குறைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத் துறைச் செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட செய்திக்குறிப்பு: சமுதாய உட்கட்டமைப்புகளை உருவாக்குவதிலும், பராமரிப்பதிலும் பொதுமக்களின் சுயஉதவி நடைமுறையை மேம்படுத்தவும் மற்றும் பங்கேற்பை அதிகரிக்கும் நோக்கிலும் 2021-ல் நமக்கு நாமே திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தில், நீர்நிலைப் புனரமைப்புப் பணிகள் தவிர்த்து, மற்ற பணிகளுக்கு பொதுமக்களின் குறைந்தபட்ச பங்களிப்பானது, பணி மதிப்பீட்டுத் தொகையில் 3-ல் ஒரு பங்காக இருக்கும். நீர்நிலை சீரமைப்புப் பணிகளுக்கு மக்களின் குறைந்தபட்ச பங்களிப்பானது, பணி மதிப்பீட்டுத் தொகையில் 50 சதவீதமாகும். எனினும், மக்களின் பங்களிப்புக்கு உச்சவரம்பு ஏதுமில்லை.
நமக்கு நாமே திட்டத்தின் கீழ்செயல்படுத்தப்படும் பணிகளுக்காக தமிழக அரசு கடந்த 2 ஆண்டுகளில் ரூ.350 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது, இதற்கான பொதுமக்களின் பங்களிப்புத் தொகை ரூ.151.77 கோடி.
இந்த திட்டத்தின் கீழ், கடந்த 2 ஆண்டுகளில் மொத்தம் 2,568 பணிகள் தொடங்கப்பட்டு, 1,446 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன.
இந்நிலையில், கடந்த 2022 ஜனவரி 7-ம் தேதி சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘நமக்கு நாமே திட்டத்தின் கீழ், பொதுமக்களின் பங்களிப்பு 3-ல் ஒன்று என்பதை, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு 5-ல் ஒரு பங்காக மாற்றி, விதிகள் தளர்த்தப்படும்’’ என்று அறிவித்தார்.
இதன்படி, நமக்கு நாமே திட்டத்தின் கீழ், மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில், குறிப்பிடப்பட்ட பகுதியின்மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதத்துக்கும் கூடுதலாகபட்டியலின மற்றும் பழங்குடி யினரின மக்கள்தொகையைக் கொண்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் எந்தப் பணிக்கும், மக்களின் குறைந்தபட்ச பங்களிப்புத் தொகையை, பணி மதிப்பீட்டுத் தொகையில் 5-ல் ஒரு பங்கு, அதாவது 20 சதவீதம் என்ற அளவுக்கு குறைத்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனினும், மக்கள்பங்களிப்புக்கான உச்சவரம்புஏதுமில்லை. இதனடிப்படையில், திட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உரிய திருத்தங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கை, பட்டியலின மற்றும் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அதிக அளவிலான பொதுமக்களின் பங்கேற்பை ஊக்குவித்து, இப்பகுதிகளுக்கு அதிக உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ஏதுவாக அமையும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.