கட்டிலை போட்டு மறித்து அரசு பேருந்தை சிறை பிடித்த திமுக பிரமுகர்..!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் மண் அள்ளப்படுவதாக கூறி திமுக பிரமுகர் ஒருவர் ஒற்றை ஆளாக சாலையில் கட்டிலை போட்டு அரசு பேருந்துகளை மறித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

அரசு பேருந்துகளை மறித்து நடு ரோட்டில் கட்டில் போட்டு அமர்ந்து அசால்ட்டாக கால் ஆட்டிக் கொண்டிருக்கும் இவர்தான் திமுகவை சேர்ந்த முத்துதுரை..!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த கொத்த மங்கலத்தில் ஒற்றை ஆளாக மறியலில் ஈடுபட்டுள்ள முத்துதுரையை எழுந்திருக்க சொல்லாமல் அருகில் ஒரு சப் இன்ஸ் பெக்டர் காவலுக்கு நின்றார்.

காலை 7 மணியில் இருந்து சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக அந்தப்பகுதியில் போக்குவரத்து முடங்கிய நிலையில் இரு அரசு பேருந்துகளுக்கும் வழிவிட மறுத்து முத்து துரை அட்ராசிட்டி செய்து கொண்டிருந்தார்.

தகவல் அறிந்து அங்கு வந்த காவல் ஆய்வாளர் பாஸ்கரன் வந்த வேகத்தில் முத்துதுரையை தட்டி தூக்கி, கட்டிலை எடுத்து சாலையோரம் வீசினார்.

அடங்க மறுத்து ஆவேசமான முத்துதுரை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதுடன், 28 ஏக்கர் குளம் முழுக்க ஆக்கிரமிப்பு என்று கொந்தளித்தார்.

அவரை குண்டுகட்டாக தூக்கிய போலீசார் வீட்டுக்கு செல்லும் படி தள்ளினர், அப்போது குளத்தில் மண் அள்ள விடமாட்டேன், சாலையை மறிப்பேன் தீக்குளிப்பேன் என்றெல்லாம் சவால் விடுத்தார் முத்து துரை.

முத்து துரையிடம் , கட்சி கொடியை கழுத்தில் போட்டுகிட்டு மறியல் செய்கிறாயே என்று பொறுப்பாக ஆதங்கப்பட்ட காவல் ஆய்வாளர் பாஸ்கர், அருகில் நின்ற கட்சிகாரர்களிடம் அவரை அங்கிருந்து அழைத்துச்செல்லுமாறு அக்கறையுடன் கூறினார்.

கொத்தமங்கலத்தில் உள்ள 28 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரியகுளத்தில் கடந்த 15 நாட்களாக மண் அள்ளப்படும் நிலையில் குளத்து நீரை பயன்படுத்துவோர் சங்க தலைவரான முத்துதுரையை எவரும் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகின்றது. இதையடுத்து குளத்தை ஆக்கிரமித்து சிலர் விவசாயம் செய்வதாகவும், அவர்களிடம் இருந்து நிலத்தை கைப்பற்றிய பின்னர் தான் குளத்தில் மண் அள்ள அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து முத்துதுரை இந்த தக் லைஃப் மறியலை மேற்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.