ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளி ஆசிரியர் பணியிட மாறுதலுக்கு ஏற்பாடு செய்யப்படும். இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை சார்பில் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் 2022-23ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களின் பொது மாறுதல் கலந்தாய்வு மே 8 முதல் மே 31ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் பல்வேறு காரணங்களால் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டது.
பொது மாறுதல் கலந்தாய்வு
இந்நிலையில் புதிய தேதி தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, மே 15 முதல் 26ஆம் தேதி வரை ஆசிரியர்களின் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்முறை EMIS லாகினை பயன்படுத்தி காலிப் பணியிடங்களை ஆசிரியர்கள் தங்கள் மொபைல் போனிலேயே பார்த்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
எமிஸ் இணைய வசதி
இதற்கேற்ப தங்களுக்கான பள்ளி எது என்பதை முன்கூட்டியே தேர்வு செய்து கொண்டு தயாராக இருக்கலாம். முன்னதாக கலந்தாய்வு நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்று தான் காலிப் பணியிடங்கள் குறித்த விவரங்களை ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள முடியும். தற்போது இந்த முறை எளிமைப்படுத்தப் பட்டுள்ளது.
ஓராண்டு பணி சலுகை
ஒரு ஆசிரியர் ஒரு பள்ளியை தேர்வு செய்துவிட்டால் அது சிவப்பு நிறத்திற்கு மாறிவிடும். அதை வேறொரு ஆசிரியர் தேர்வு செய்ய முடியாது என்பது கவனிக்கத்தக்கது. அதுமட்டுமின்றி பொது மாறுதல் கோரி விண்ணப்பிக்க தற்போது பணிபுரியும் பள்ளியில் ஓராண்டு வரை பணி முடித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சலுகை வழங்கப்பட்டுள்ளது.
மொத்தம் 12 வாய்ப்புகள்
கலந்தாய்வை பொறுத்தவரை ஆசிரியர்கள் தாங்கள் செல்ல விரும்பும் பள்ளிகளின் பட்டியலை முன்கூட்டியே தேர்வு செய்ய வேண்டும். இதற்காக தரப்படும் 12 வாய்ப்புகளின் அடிப்படையில் 12 பள்ளிகளை தேர்வு செய்யலாம். அதில் மற்ற ஆசிரியர்களின் தேர்விற்கு தனக்கான வாய்ப்பு வரும் போது உரிய பள்ளியை தேர்வு செய்து கொள்ள முடியும்.
பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அறிவுரைகள்
எமிஸ் இணைய தளத்தில் லாகின் ஐடியை பயன்படுத்தி ஆசிரியர்கள் விண்ணப்பிக்க வேண்டும். மாறுதல் கோரும் படிவத்தில் உரிய விவரங்கள் பதிவேற்றம் செய்வது அவசியம்.இந்த விவரங்களை தலைமை ஆசிரியர்கள் சரிபார்த்து ஒப்புதல் வழங்க வேண்டும்.இதுதொடர்பான நகல்களை முதன்மை கல்வி அலுவலருக்கு தலைமை ஆசிரியர்கள் அனுப்பி வைக்க வேண்டும்.