மூச்சு முட்டும் அலமாரி; தேவையற்றவையைக் கழிக்கும் தைரியம் உங்களுக்கு உண்டா? | மினிமலிசம் – 17

இதுநாள் வரையிலும் நம் வீட்டில் தேவையில்லாத எத்தனையோ பொருள்களை அகற்றியிருக்கிறோம். விற்பனை செய்திருக்கிறோம். நன்கொடையாக அளித்திருக்கிறோம். அட்லீஸ்ட் குப்பைத் தொட்டியிலாவது போட்டிருக்கிறோம். ஆனால், பிதுங்கி வழியும் வார்ட்ரோபை, தேவையற்றவை அகற்றி, சுத்தம் செய்வது பற்றி சீரியஸாக யோசித்திருக்கிறோமா?

‘இல்லை’ என்பதே நம்மில் பலரின் பதிலாக இருக்கும். ஏனெனில், உடை என்பது நம்மைப் பொறுத்தவரை வெறும் உடை மட்டுமே அல்ல. அதையும் தாண்டி சென்டிமென்டானது.

வார்ட்ரோப் | மினிமலிசம்

`இது முதன்முதலாகக் கட்டிய புடவை!’

`இது அவர் வாங்கித் தந்த உடை!’

`இது முதல் சம்பளத்தில் வாங்கியது!’

`இது பாட்டி அம்மாவுக்குக் கொடுத்து, பிறகு அம்மா எனக்குக் கொடுத்தது!’

`இது எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த கலர்’

`இது பிறந்த நாள் பரிசு!’

`இது எனக்கு நானே அளித்துக்கொண்ட ‘ஃபீல் குட்’ ஜீன்ஸ் & டாப்!’

– இப்படி எல்லாவற்றுக்கும்… குறிப்பாக ஒவ்வோர் உடைக்கும் உரிய சென்டிமென்ட் காரணங்கள் வைத்திருப்போம். அதனாலேயே, நான்கு வார்ட்ரோப்களைத் தாண்டி, ஐந்தாவது வார்ட்ரோப் வாங்கி, அதை எங்கு வைப்பது என்று இடம் தேட வேண்டிய நிலை கூட பலருக்கு இருக்கும்!

`இந்த உடை வேண்டாம்’ என முடிவு செய்வதற்கு கடினமாக இருக்கலாம். இந்தக் காரணங்களுக்காக நீங்கள் அந்த ஆடைகளை வைத்திருக்கிறீர்களா என்று நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்…

* இது உணர்வுபூர்வமான மதிப்பைக் கொண்டுள்ளது.

* இதற்கு மிக அதிக தொகையை செலவு செய்திருக்கிறேன். அதனால், பயனே இல்லையென்றாலும்கூட தூக்கிப்போட மனம் ஒப்பவில்லை.

* என்றாவது ஒருநாள் இதை அணியலாம். ஆனால், அது எப்போது வரும் என்று யாருக்குத் தெரியும்?

உடைகள் | மினிமலிசம்

இவை அனைத்தும் ஓர் உடையைப் பற்றிக் கொள்வதற்கான, என்னாலும் புரிந்து கொள்ளக்கூடிய காரணங்களே. ஆனால், பிரச்னை என்ன? உங்கள் துணிகளைச் சேமிக்க உங்களுக்கு குறைந்த இடமே உள்ளது என்பதே உண்மை. திருமண உடையைப் போல, ஒரு பொருள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தால், உங்கள் அலமாரியைத் தவிர வேறோர் இடத்தில் அதைப் பத்திரப்படுத்தவும். ஆண்டுக்கொரு முறைதான் அதை எடுத்து, பிரித்து, மடித்து வைக்கப்போகிறீர்கள்.

அதே நேரத்தில் நீங்கள் ஓராண்டுக்கும் மேலாக ஒரு குறிப்பிட்ட உடையை அணியவில்லை என்றால், அதைத் தயங்காமல் அகற்றவும். இது கடினமாக இருந்தாலும் அதைவிட சிறந்த, நீங்கள் அடிக்கடி விரும்பி அணியக்கூடிய ஓர் உடைக்கு உங்கள் அலமாரியில் இடம் கொடுக்க முடியுமல்லவா?

அப்படி இப்படி சகலகலா சவால்களைத் தாண்டி, உங்கள் அலமாரியில் உள்ள அவசியமற்ற ஆடைகளை அகற்றுவது எப்படி?

உங்கள் உடை அலமாரியை (வார்ட்ரோப்) சுத்தப்படுத்தும் நேரம் இது என்பதைக் குறிக்கும் சில உறுதியான அறிகுறிகள் உள்ளன. அவை…

* நீங்கள் இனி அணிய முடியாத ஆடைகள் நிறைந்துள்ளன.

* உங்களுக்குத் தேவையானதை நீங்கள் கண்டுபிடிக்க முடியாத அளவு அதிக ஆடைகள் குவிந்துள்ளன.

* மிகவும் நெரிசலாக வைக்கப்பட்டிருப்பதால் உங்கள் ஆடைகள் சுருக்கம் அடைந்துவிடுகின்றன.

Wardrobe | மினிமலிசம்

அடுத்து… உங்கள் உடை அலமாரியில் உள்ள ஒவ்வோர் உடையை பற்றியும் பின்வரும் கேள்விகளை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.

* நான் இதை விரும்புகிறேனா?

* நான் இதை செளகர்யமாக அணிய முடியுமா?

* நான் விரும்பும் உருவத்தை இது காட்டுகிறதா?

* கறை படிந்துள்ளதா?

* இப்போதும் இது எனக்குப் பொருந்துமா?

இந்தக் கேள்விகளில் ஒன்றுக்கு மேற்பட்ட கேள்விகளுக்கு நெகட்டிவ் பதில்கள் (இல்லை, முடியாது, வாய்ப்பே இல்ல ராசாத்தி) கிடைத்தால், நீங்கள் வாராந்தர வார்ட்ரோப் ஒழுங்குப் பணியில் ஈடுபடுவது அவசியம். அதாவது, வாரத்துக்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை உங்கள் அலமாரியில் 10 முதல் 15 நிமிடங்கள் செலவழித்து, வேண்டாத உடைகளை மன உறுதியோடு வெளியே எடுத்துவிடுங்கள்.

‘இனி இந்த உடை நமக்கானது இல்லை’ என்று மனத்தை தைரியப்படுத்திக் கொள்ளுங்கள். இதை வாரந்தோறும் நீங்கள் தவறாமல் கடைப்பிடித்தால், நீங்கள் நினைப்பதைவிட மிகக் குறைவான நேரத்திலேயே அழகான ஆடை அலமாரியை உருவாக்கிவிடலாம். அதன் பிறகு உங்கள் தேர்வுகள் எளிதாகும்; நேரம் மீதமாகும்… அலமாரிக்கும் மூச்சு முட்டாது!

உடைகள் | மினிமலிசம்

இன்னொரு வழியும் உண்டு. இதற்கு ஒரே ஒரு விடுமுறை நாளை நீங்கள் தியாகம் செய்ய வேண்டியிருக்கும். அது…

* எல்லாவற்றையும் அலமாரியில் இருந்து வெளியே எடுக்கவும். பின்னர், அலமாரியை தூசி தட்டி, வெற்றிடத்தை நன்கு துடைக்கவும்.

* வெளியே எடுத்தவற்றை உடைவாரியாக | நிறவாரியாக | ஸ்டைல் வாரியாக பிரித்து தரையிலேயே அடுக்கவும்.

* ஒவ்வொரு பிரிவிலும் மிக அவசியமான, மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய உடைகளை மட்டும் ஃபில்டர் செய்து எடுங்கள். அதையும் மீண்டும் ஒருமுறை ஃபில்டர் செய்யுங்கள்.

* இறுதித் தேர்வில் வென்ற உடைகளை மட்டும் ரகவாரியாக, எளிதாக எடுத்துப் பயன்படுத்தும் வகையில் அலமாரிக்குள் அழகாக வையுங்கள்.

* குறிப்பிட்ட வாரங்களுக்கு ஒருமுறை அல்லது மாதந்தோறும் இதே முறையில் ஒரு முழுமையான அலமாரியை சுத்தம் செய்யுங்கள்.

மினிமலிச வாழ்வில் வார்ட்ரோப் ஒழுங்குப்படுத்துவது மிக முக்கியமான ஒன்றாகும். ஆகவே, உடைகளை பற்றியும் அவசியமற்ற உடைகளை அப்புறப்படுத்தும் பல்வேறு வாய்ப்புகள் பற்றியும் தொடர்ந்து பேசுவோம். ஏனெனில், உடை என்பது உடை மட்டுமே அல்ல!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.