இஸ்லாமாபாத், ‘பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம்’ என கூறிய அந்நாட்டு உச்ச நீதிமன்றம், அவரை உடனடியாக விடுவிக்கும்படி உத்தரவிட்டது.
பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் விலகிய பின், அவர் மீது ஊழல், மோசடி, கொலை மிரட்டல் உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், அல்காதிர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கான் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்குச் சொந்தமான அல்காதிர் அறக்கட்டளை வாயிலாக, 5,000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு உள்ளது.
இந்த வழக்கில், இம்ரான் கானை கைது செய்ய, அந்நாட்டின் ஊழல் தடுப்பு பிரிவான தேசிய பொறுப்புடைமை பணியகம், கடந்த 1ம் தேதியன்று வாரன்ட் பிறப்பித்தது. இந்நிலையில், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் கடந்த 9ம் தேதி இம்ரான் கான் ஆஜரானார்.
அப்போது, ‘ரேஞ்சர்ஸ்’ படையைச் சேர்ந்த, 100 வீரர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்து இம்ரான் கானை பலவந்தமாக கைது செய்து அழைத்துச் சென்றனர். இது நாடு முழுதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இம்ரானை 8 நாள் காவலில் வைத்து விசாரிக்க, பொறுப்புடைமை நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இந்நிலையில், இந்த கைது சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி, இம்ரான் கான் தரப்பு பாக்., உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனு, தலைமை நீதிபதி உமர் அட்டா பந்தியால் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, உயர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து இம்ரான் கான் கைது செய்யப்பட்ட முறை குறித்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்திய நீதிபதிகள் அவரை மாலை 4:30 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டனர்.
இதையடுத்து பலத்த பாதுகாப்புக்கு இடையே இம்ரான் கான் உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, இம்ரான் கான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது என தெரிவித்த நீதிபதிகள், அவரை உடனடியாக விடுவிக்கும்படி உத்தரவிட்டனர்.
மேலும், இஸ்லாமாபாத் நீதிமன்றம் அறக்கட்டளை வழக்கை இன்று விசாரிக்க வேண்டும். அப்போது, நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பித்தாலும் அதை நீங்கள் ஏற்க வேண்டும் என, இம்ரான் கானுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னாள் அமைச்சர் கைது!
இம்ரான் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து நாடு முழுதும் கலவரம் வெடித்தது. அவரது தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சியை சேர்ந்த ஆதரவாளர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.இந்நிலையில், இம்ரானின் நெருங்கிய நண்பரும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான, ஷா மெஹ்மூத் குரேஷி, 66, நேற்று கைது செய்யப்பட்டார். சாதாரண உடை அணிந்த சிலர் அவரை அழைத்துச் செல்லும் காட்சிகளை, தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சி நேற்று வெளியிட்டது. அவர் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்