மிட்ஜர்னி அல்லது ஸ்டேபிள் டிஃப்யூஷன் போன்ற ஜெனரேட்டிவ் AI தொழில்நுட்பங்கள் மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் உண்மையாக எடுக்கப்பட்டது போலவே இருக்கிறது. அதனை வைத்து போலியை அடையாளம் காண்பது கடினமாக இருப்பதால், இது உலகம் முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. பலரும் இது குறித்து கவலை தெரிவித்தனர். ஏற்கனவே கூகுளில் புகைப்படங்களின் மூலத்தை கண்டறியும் அம்சம் உள்ளது என்றாலும் ஏஐ தொழில்நுட்பங்களால் உருவாக்கப்பட்ட புகைப்படங்களை அடையாளம் காணும் அம்சங்கள் இதுவரை இல்லாமல் இருந்தது. இது குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பிய போதும் கூகுள் நிறுவனம் விளக்கம் அளிக்கவில்லை.
அதேநேரத்தில் ஏஐ தொழில்நுட்பங்களின் தேவையை கருத்தில் கொண்டு ரகசியமாக பல்வேறு தொழில்நுட்பங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது. இப்போது சர்பிரைஸாக கூகுள் சாட்போட் ஏஐ தொழில்நுட்பங்களை உலகுக்கு அறிமுகப்படுத்தி டெக் உலகில் கோலோச்சும் போட்டி நிறுவனங்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அதில் ஒன்று தான் போலி புகைப்படங்களை கண்டுபிடிக்கும் About this image தொழில்நுட்பமும்.
உங்களுக்கு ஒரு புகைப்படம் உண்மையானதா? போலியானதா? என்பது குறித்த கேள்வி இருக்கும்போது, இந்த கருவி உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். கூகுள் ஏஐ சேர்ச் என்ஜினில் டீபால்டாக இந்த அம்சமும் இருக்கும். புகைப்படத்தில் இருகுக்கும் ஒளிக்கலவை உள்ளிட்ட பல்வேறு கூறுகளை ஆராய்ந்து புகைப்படம் ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதா? அல்லது உண்மையானதா என்பதை தெரிவிக்கும். இன்னும் வரும் நாட்களில் புகைப்படம் உருவாக்கும் ஏஐ தொழில்நுட்பங்கள் ஒவ்வொன்றுக்கும் பிரத்யேகமாக சாப்ட்வேரை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறது கூகுள்.
இப்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் அம்சத்தில் புகை படத்தின் மெட்டாடேட்டாவைச் சரிபார்க்கும். மெட்டாடேட்டா என்பது ஒரு படத்துடன் சேமித்து வைக்கப்படும் தரவு மற்றும் படத்தை உருவாக்கிய தேதி மற்றும் நேரம், அதை எடுக்கப் பயன்படுத்திய கேமரா மற்றும் எடுக்கப்பட்ட இடம் போன்ற தகவல்களை வழங்க முடியும். ஒரு படத்தின் மெட்டாடேட்டா படத்துடன் பொருந்தவில்லை என்றால், அது படம் போலியாக உருவாக்கப்பட்டிருக்கலாம் என அடையாளம் கண்டு கொள்ளலாம்.