பிடிஆருக்கு இவ்வளவு ஆதரவா? முடிவை மாற்றும் ஸ்டாலின்? இனி தான் ஆட்டமே இருக்கு!

முதல்வர் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக முதலமைச்சராக பதவியேற்ற போது அமைச்சரவையில் நிதியமைச்சராக பழனிவேல் தியாகராஜனை கொண்டு வந்தபோது பெரும் வரவேற்பு கிடைத்தது. கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் என மூத்தவர்கள் தங்கள் வசம் வைத்திருந்த துறையை அமைச்சராக அறிமுகம் ஆகும் போதே பெற்றார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். நிதித்துறையில் பிடிஆருக்கு இருக்கும் சர்வதேச அனுபவம், அவரது கல்வி பின்புலம் ஆகியவற்றை பார்க்கும் போது அதற்கு இதைவிட சரியான ஆள் இல்லை என்ற முடிவுக்கு ஸ்டாலின் எளிதாக வந்திருக்கலாம்.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு எதிர்ப்பு ஏன்?ஒன்றிய அரசை சரியான வார்த்தைகளில் எதிர்ப்பது, துறை ரீதியான தரவுகளில் தெளிவு, கொள்கையில் உள்ள உறுதி ஆகியவை அவரை தனித்துக் காட்டியது. தமிழ்நாட்டுக்கு வெளியே உள்ள படித்த வர்க்கம் அண்ணாவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டு தலைவர் ஒருவரை இவ்வளவு வியப்புடன் பார்ப்பது இப்போது தான் என்கிறார்கள். இதனாலே எதிர்கட்சிகள் அமைச்சரவையில் உள்ள மற்றவர்களைக் காட்டிலும் இவரை கடுமையாக எதிர்த்தனர், எதிர்த்துக் கொண்டிருக்கின்றனர்.
திமுக சீனியர் அமைச்சர்கள்!கொள்கை, துறை ரீதியான அனுபவம் ஆகியவற்றில் முந்தும் பிடிஆருக்கும் கட்சியில் உள்ள சில சீனியர்களுக்கும் ஆரம்பம் முதலே உறவு அவ்வளவு சுமுகமாக இல்லை. சில சமயங்களில் வார்த்தை மோதல்களும் நடந்தன. அந்த சமயத்தில் எல்லாம் பிடிஆரை அழைத்து பேசிய ஸ்டாலின் அவரது பதவிக்கு சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொண்டார் என்றே கூறுகிறார்கள் கட்சியின் உள் விவகாரம் அறிந்தவர்கள்.
பந்தாடப்பட்ட பிடிஆர்ஆனால் ஆடியோ விவகாரம் வெளிவந்த பின்னர் பிடிஆருக்கு எதிரான எதிர்ப்பு அதிகமானது. அவர் மீது ஏற்கெனவே புகார் கடிதம் வாசித்துக் கொண்டிருந்த சீனியர்கள் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டனர். முதல்வர் ஸ்டாலின் இந்த முறை அவர்களுக்கு செவிகொடுக்க பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தொழில் நுட்பத்துறைக்கு பந்தாடப்பட்டுள்ளார்.
திமுக அரசு தேங்கி நிற்கிறதா?ஸ்டாலின் இந்த முடிவெடுக்க வேறொரு முக்கிய காரணம் இருக்கிறது என்கிறார்கள். “கடும் நிதி நெருக்கடியில் தான் அவர் முதல்வராக பொறுப்பேற்றார். எனவே செலவுகளை கடுமையாக குறைத்து, வருமானத்தை உயர்த்த பிடிஆர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். இதற்கு நல்ல பலன் கிடைத்தது. அதே சமயம் பல்வேறு துறைகளின் கோப்புகள் நிதியை காரணம் காட்டி நிறுத்திவைக்கப்பட்டன. இதனால் திமுக அரசு ஆக்டிவாக செயல்படாதது போன்ற தோற்றம் உருவாகியுள்ளது.
தங்கம் தென்னரசு ஏன்?இரண்டு ஆண்டுகள் வரை சரி; இனியும் அப்படியே இருந்தால் மக்களுக்கு ஆட்சி மீது நல்ல அபிப்ராயம் இருக்காது, 2024 மக்களவைத் தேர்தலில் மக்களை சந்திக்க முடியாது என முதல்வர் நினைக்கிறார். எனவே தமிழ்நாடு அரசியலைப் பற்றி நல்ல புரிதல் உள்ள, மற்ற துறை அமைச்சர்களை அணுசரித்து செல்லக்கூடிய, மிக முக்கியமாக தனது எண்ணவோட்டத்தை பிரதிபலிக்ககூடிய தென்னரசுவை நிதியமைச்சராக ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார்” என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

பிடிஆருக்கு முன்னுரிமை!அதே சமயம் திறமை எங்கிருந்தாலும் உடனே அங்கீகரிக்கும் ஸ்டாலின் பிடிஆர் விஷயத்தில் சறுக்கியதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். பிடிஆரின் துறை மாற்றத்துக்கு இவ்வளவு எதிர்ப்பு வரும் என ஸ்டாலின் எதிர்பார்க்கவில்லை. இதை உடனே சரிகட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதற்கு மேல் இந்த விவகாரத்தை நீட்டிக்க விரும்பாத அவர் பிடிஆருக்கு முன்னுரிமை கொடுக்க உள்ளாராம். இனி வரும் நாள்களில் தகவல் தொழில்நுட்பத்துறை நிகழ்ச்சிகளில் முதல்வர் அடிக்கடி தலைகாட்டுவார் என்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.