சென்னை: மதயானைக் கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு, பிரபு, கயல் ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இராவண கோட்டம் திரைப்படம் இன்று வெளியானது.
கொரானாவால் படத்தின் ஷூட்டிங் பல முறை தடையான நிலையில், சுமார் 4 ஆண்டு கால உழைப்புடன் இந்த படம் உருவாகி உள்ளது.
இராவண கோட்டம் படத்தை பார்த்த சினிமா பிரபலங்கள் பலரும் இந்த படத்திற்கு கொடுத்துள்ள விமர்சனந்த்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
இராவண கோட்டம்: கதிர், ஓவியா நடித்த மதயானைக் கூட்டம் படத்தை இயக்கிய இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு, பிரபு, கயல் ஆனந்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள இராவண கோட்டம் படத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் நடக்கும் விஷயங்களை இயக்குநர் வெளிச்சத்திற்கு கொண்டு வர முயற்சித்து இருக்கிறார்.
கிராமங்களில் இன்னமும் சாதிய பாகுபாடுகள் நிறைந்திருக்கும் நிலையில், சாதி சண்டை உருவாக என்ன காரணம்? அதை எப்படி தவிர்ப்பது உள்ளிட்ட சமூக அக்கறை கொண்ட கதையாக இந்த இராவண கோட்டத்தை இயக்கி உள்ளாராம் விக்ரம் சுகுமாரன்.
கே.எஸ். ரவிக்குமார் விமர்சனம்: கருவேல மரங்களினால் நீர் வலம் பாதிப்படைவது உள்ளிட்ட அரசியல்களை ஆழமாக சொல்லாமல் லேசாக தொட்டுச் சென்று இருக்கிறது இந்த இராவண கோட்டம். நடிகர் சாந்தனு மற்றும் ஹீரோயினாக நடித்த கயல் ஆனந்தி இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இசை உள்ளிட்ட விஷயங்களும் படத்திற்கு பலமாக உள்ளது என இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
இயக்குநர் சுசீந்திரன் பேச்சு: இராவண கோட்டம் படத்தின் செலிபிரிட்டி ப்ரீமியர் ஷோவை பார்த்து விட்டு வெளியே வந்த இயக்குநர் சுசீந்திரன் இராவண கோட்டம் திரைப்படம் அருமையாக உள்ளதாகவும் பாக்கியராஜின் மகன் சாந்தனு இந்த படத்துக்காக ரொம்பவே கஷ்டப்பட்டு நடித்துள்ளார். நிச்சயம் அவரது உழைப்புக்கு பலன் கிடைக்கும் என பாராட்டி உள்ளார்.
பாண்டியராஜன் பாராட்டு: பாக்கியராஜின் சிஷ்யன் இயக்குநர் பாண்டியராஜன் இந்த படத்தை பார்த்து விட்டு எங்க வீட்டு பிள்ளை சாந்தனுவா இவர் என நம்பவே முடியவில்லை. எனக்கு தெரிந்த கிராமம் எல்லாம் சாலிகிராமம் மட்டும் தான். ஆனால், சாந்தனு அந்த பொட்டல் காட்டில் கிராமத்து இளைஞனாகவே அதற்கு ஏற்ற ஃபிட்னஸ், ஸ்லாங் என அனைத்துமே ஒன்றாக இணைந்து நடித்து மிரட்டி இருக்கிறார் என பாராட்டி உள்ளார்.
பாராட்டிய பிரபலங்கள்: இயக்குநர் மோகன் ராஜா, ஒய்.ஜி. மகேந்திரன், நடிகர் சரத்குமார், பூர்ணிமா பாக்கியராஜ், சாந்தனுவின் மனைவி கிகி விஜய் என பல பிரபலங்கள் இந்த படத்தை பார்த்து விட்டு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.