கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ஆம் தேதி காலை முதல் எண்ணப்படவுள்ளன. பிற்பகலுக்குள் முடிவுகள் தெரிந்துவிடும். இங்கு தேர்தல் களம் என்பது பாஜக,
காங்கிரஸ்
, மதச்சார்பற்ற ஜனதா தளம் என மும்முனை போட்டியாக காணப்படுகிறது. அதிலும் ஆட்சியை தக்க பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸும், கிங் மேக்கர் கனவில் மதச்சார்பற்ற ஜனதா தளமும் இருக்கின்றன.
கர்நாடக சட்டமன்ற தேர்தல்
எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டமன்றம் அமையும் எனவும் தெரிவித்துள்ளன. இவை எந்த அளவிற்கு உண்மையாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, கர்நாடக தேர்தல் முடிவுகள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அண்ணாமலை பேட்டி
அப்போது, கர்நாடகாவில் நடந்து முடிந்தது ஒரு கடுமையான தேர்தல். 1985க்கு பிறகு ஆளுங்கட்சி தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சி அமைத்தது இல்லை. அதை பாஜக இம்முறை உடைத்து காட்டும் என நம்பிக்கை உள்ளது. கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 113 தான் மேஜிக் நம்பர். அம்மாநிலத்தில் உள்ள 6 மண்டலங்களும் வித்தியாசமானவை. ஒவ்வொருவரும் வெவ்வேறு மாதிரி வாக்களிப்பர்.
மேஜிக் நம்பர் 113
நாளை வாக்கு எண்ணிக்கையின் போது பாஜக 113ஐ தாண்டி விடும் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று கூறினார். கருத்துக்கணிப்பு முடிவுகளை பற்றி கேட்கும் போது, மற்ற மாநிலங்களை போல கிடையாது. கர்நாடகாவை கணிப்பது கடினம். இம்மாநிலத்தின் வடக்கில் மராத்தா ஆதிக்கம் நிறைந்தது. கல்யாண் கர்நாடகா அது வேற மாதிரி. மத்திய கர்நாடகா, மைசூரு கர்நாடகா, பெங்களூரு கர்நாடகா, கடலோர கர்நாடகா என ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி.
கர்நாடக தேர்தல் முடிவுகள்
எப்போதுமே எக்ஸிட் போல் முடிவுகள் தவறாக தான் கூறும். கடந்த 2018ஆம் ஆண்டிலும் நடந்துள்ளது. நாங்கள் களத்தில் நேரில் நின்று பார்த்திருக்கிறோம். மக்களின் ஆதரவு யாருக்கு என்பதை உணர்ந்துள்ளோம். அதன்பிறகு ஆண்டவனின் முடிவு, மக்களின் முடிவு. அதற்கேற்ப நாங்கள் உழைப்பை போட்டிருக்கிறோம் என்று தெரிவித்தார். தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகும் சூழலில், இன்று காலை முதலே அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கி வருகின்றன.
கிங் மேக்கர் ஜேடிஎஸ்
முன்னாள் முதல்வர் எடியூரப்பா தலைமையில் பாஜக தலைவர்கள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். மறுபுறம் காங்கிரஸ் மிகுந்த நம்பிக்கையுடன் முதல்வர் தேர்விற்காக டெல்லிக்கு சிக்னல் கொடுத்துள்ளது. இதற்கிடையில் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சி தலைவர் ஹெச்.டி.குமாரசாமி, தன்னிடம் காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் பேசி வருகின்றன.
முதல்வர் நாற்காலி, முக்கியமான அமைச்சர் பதவிகள் உள்ளிட்ட கண்டிஷன்களுடன் தான் கூட்டணிக்கு ஒத்துக் கொள்வேன் என்று கறார் காட்டி கொண்டிருக்கிறார். எனவே கர்நாடக மக்கள் எழுதியுள்ள தீர்ப்பை தெரிந்து கொள்ள காத்திருப்போம்.