முதலமைச்சரையும் ஒட்டு மொத்த மாநிலக் காவல்துறையையும் எதிர்த்து, ஒரு தாதாவை ஒரு சாதாரண கான்ஸ்டபிள் எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதுதான் `கஸ்டடி’ என்கிற `வெங்கட் பிரபுவின் ஹன்ட்’.
ஆந்திர மாநிலம் இராஜ முந்திரி மாவட்டத்தில் 90களின் இறுதியில் நடக்கிறது கதை. எஸ்.ஐ தேர்வு எழுதி, அதன் முடிவுக்காகக் காத்திருக்கும் கான்ஸ்டபிள் சிவாவும், ஓட்டுநர் பள்ளி ஆசிரியரான ரேவதியும் பள்ளி காலத்திலிருந்தே காதலித்து வருகிறார்கள். காதலுக்கு ரேவதியின் அப்பா எதிர்ப்பு தெரிவிக்க, அவரின் எதிர்ப்பை மீறி கல்யாணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார்கள்.
இந்நிலையில், ஒரு எதிர்பாராத விபத்தால், பெரிய தாதாவான ராசுவை பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் பொறுப்பைக் கையில் எடுக்கிறார் சிவா. தவிர்க்க முடியாத காரணத்தால், காதலி ரேவதியும் இவர்களுடன் இணைகிறார். தாதா ராசு சட்டத்தின் கையில் மாட்டினால் சிக்கல் என்பதால், அவரைக் கொலை செய்யக் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தொடங்கி முதலமைச்சர் வரை மொத்த மாநில அரசும் முயற்சி செய்கிறது. இவர்களை எல்லாம் சமாளித்து, ராசுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினாரா, குற்றவாளியான அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிவா ஏன் இத்தனை பாடுபடுகிறார், ராஜுவைக் கொல்ல முதலமைச்சரே களமிறங்கக் காரணம் என்ன, இறுதியில் சிவாவின் காதல் என்னவானது போன்ற கேள்விகளுக்கு, ஒரு ‘அதிரடியான ஆக்ஷன்’ திரைக்கதையில் பதில் அளித்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.
ஒரு ‘யதார்த்தமான’ ஆக்ஷன் ஹீரோவுக்கான உடல்மொழியை நேர்த்தியாகக் கொண்டுவந்திருக்கிறார் நாக சைதன்யா. ஆனால், ஒரு மாநில அரசை ஒரு சாதாரண கான்ஸ்டபிள் எதிர்த்து நிற்கும்போது, அவர் காட்ட வேண்டிய பதற்றம், கோபம், பயம் என எதையுமே முகத்தில் காட்டாமல் இருப்பது படத்திற்கு பெரும் மைனஸ். கதாநாயகி கீர்த்தி ஷெட்டி படம் முழுவதும் வந்தாலும், வலுவாகவோ புதுமையாகவோ இல்லாத கதாபாத்திரம். கதாநாயகனுக்கு சமமாக தாதா ராசுவாக அர்விந்த் சாமி. கெத்தான உடல்மொழி, அதற்கேற்ற பேச்சு, மாட்டிக்கொண்டபின் செய்யும் கலாய்கள் எனக் கிடைத்த எல்லா இடத்திலும் சிக்ஸர் அடித்திருக்கிறார். முக்கிய வில்லனாக, சரத்குமாரும் தன் பங்கிற்குப் பலம் சேர்த்திருக்கிறார். இவர்கள் தவிர, முதலமைச்சராக பிரியாமணி, சிபிஐ அதிகாரிகளாக சம்பத், ஜெயபிரகாஷ், சிறப்புத் தோற்றத்தில் ஜீவா, ராம்கி, ஆனந்தி ஆகியோர் தங்கள் பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.
கதாநாயகனின் காதல் கதையை முதலில் பேசுகிறது திரைக்கதை. கதாநாயகனின் நல்ல உள்ளம், வழக்கமான நல்ல குடும்பம், காதலி வீட்டில் வரும் பிரச்னை, நாயகனின் இன்ட்ரோ பாடல், காதல் பாடல், காதலுக்கு இடையூறாக வரும் காமெடி வில்லனாக பிரேம்ஜி என படு க்ளீசேவாக நகர்கிறது படம். முழுக்க ஆந்திரப் பின்னணியில் நடப்பதும், தமிழுக்கான லிப் சின்க்குகள் கைகூடாததும் படத்தோடு நம்மை ஒன்றவிடாமல் செய்கின்றன. பிரேம்ஜி காமெடிகள் மட்டுமல்ல, காதல் காட்சிகளும் ரசிக்கும்படியாக இல்லாததால், முதல் அரைமணி நேரம் பொறுமையைச் சோதிக்கிறது. நாக சைதன்யாவும் அர்விந்த் சாமியும் சந்திக்கும் காட்சியிலிருந்துதான் வேகமெடுக்கிறது திரைக்கதை. காவல் நிலையம் மற்றும் அணையில் நடக்கும் சண்டைகள் காட்சிகள், அர்விந்த் சாமியின் ஒன்லைன் காமெடிகள் எனப் பரபரப்பாகவும் இடை இடையே கலகலப்பாகவும் செல்கிறது முதற்பாதி.
சாதா கான்ஸ்டபிள் ஒட்டு மொத்த மாநில அரசையும் காவல்துறையையும் எதிர்த்து நிற்கிறார் என்பதுதான் இரண்டாம் பாதிக்கான ஒன்லைன். அதிலும், 24 மணி நேரத்தில் அந்த டாஸ்க்கை முடிக்க வேண்டும் என்பது கூடுதல் ட்விஸ்ட். ஆனால், இதற்கான திரைக்கதையில் சுவாரஸ்யமாக எதையும் சேர்க்காமல், வெறும் ஆக்ஷன் காட்சிகளையே நம்பி பயணிக்கிறது இரண்டாம் பாதி. கதாநாயகனின் பின்கதையில் வரும் ஜீவாவும் ஆனந்தியும் எந்தத் தாக்கத்தையும் தராமல் செல்கிறார்கள். உணர்வுரீதியாகக் கதாபாத்திரங்களோடு ஒன்ற முடியவில்லை என்பதால், திரைக்கதையில் நிகழும் முக்கிய மரணங்களும் வெறும் காட்சிகளாகவே கடந்து சென்றுவிடுகின்றன. ஒரு மாநில காவல்துறையைக் கண்டு, மத்திய அரசின் கீழ் இயங்கும் சிபிஐ-யே பயப்படுகிறது என்பதும் நம்பும்படியாக இல்லை.
ஒரு கட்டத்தில் மொத்த திரைக்கதையும் யூகிக்கக் கூடியதாக மாறி சுவாரஸ்யமற்று போகிறது. அர்விந்த் சாமி மட்டுமே ஓரளவுக்குப் படத்தைக் காப்பாற்ற முயன்றிருக்கிறார். ‘இது வெங்கட் பிரபு படம்தானா?’ என்று கேட்கும் அளவுக்கு அவரின் காமெடி முத்திரை படத்தில் மிஸ்ஸிங். இறுதிக்காட்சியை நெருங்க நெங்க லாஜிக் ஓட்டைகளும் கூடிக்கொண்டே போகின்றன. சரத்குமார், அர்விந்த் சாமி, நாக சைதன்யா ஆகியோர் சந்தித்துக்கொள்ளும்போது சண்டை போடுகிறார்களா இல்லை சண்டை போட வேண்டும் என்பதற்காகவே சந்தித்துக்கொள்கிறார்களா என்ற கேள்வியும் எழுகிறது. ஒட்டு மொத்த படத்திலும், சண்டைக் காட்சிகளின் ஆக்கமும், அர்விந்த் சாமியின் கதாபாத்திரமும் மட்டுமே ஆறுதல் தருகின்றன. இறுதிக்காட்சியில் வரும் திருப்பம், நம்மை நிஜமாகவே 90களின் சினிமாவிற்கே கொண்டு செல்கிறது. ராம்கியை வைத்து வரும் அந்தக் காட்சி நிஜமாகவே மாஸ் கூட்ட வைத்ததா, ஸ்பூஃப்பாக எடுக்கப்பட்டதா என்பது புரியவில்லை.
எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவும் வெங்கட் ராஜனின் படத்தொகுப்பும் படத்துக்குப் பெரும் பலத்தைத் தந்திருக்கின்றன. எல்லா ஆக்ஷன் காட்சிகளிலும் இருவரும் கூட்டணி போட்டு உழைத்திருக்கிறார்கள். முக்கியமாக, காவல்நிலையத்திற்குள் நடக்கும் சிங்கிள் ஷாட் சண்டைக் காட்சியில், எஸ்.ஆர்.கதிரின் கேமரா சிக்ஸர் அடித்திருக்கிறது.
இளையராஜா, யுவன் சங்கர் ராஜாவின் இசையில் எந்தப் பாடலும் ரசிக்கும்படியாக இல்லை. முதற்பாதியில் உள்ள பாடல்கள் நம் பொறுமையைச் சோதிக்க மட்டுமே பயன்படுகின்றன. பரபர ஆக்ஷனுக்கு யுவனும், சோக காட்சிகளுக்கு இளையராஜாவும் பின்னணியிசை தந்திருப்பதாக உணர முடிகிறது. அது சில காட்சிகளில் மட்டுமே க்ளிக் ஆகியிருக்கிறது. தீம் இசை மட்டும் ஹீரோயிஸ பில்டப்புக்குத் துணை புரிந்திருக்கிறது.
லாஜிக் ஓட்டைகளைக் கவனித்து, தேவையற்ற காட்சிகளைக் கத்தரித்து இன்னும் பரபரப்பைக் கூட்டியிருந்தால் இந்த `கஸ்டடி’க்கு நாமும் விசில் அடித்திருக்கலாம்.