டிகே சிவக்குமார்.
“இவரை போன்ற நபர்கள் முதல்வராக வந்தால் கர்நாடக மாநில இளைஞர்களின் எதிர்காலம் சிறப்பானதாக இருக்கும். மக்களின் தேர்வு இவர் தான். கொரோனா நெருக்கடி காலத்தில் செய்த உதவிகளை மறக்க முடியாது. பாஜகவிற்கு ஒவ்வொரு விஷயத்திலும் பதிலடி கொடுக்க டிகே தான் சரியான நபர். கர்நாடகாவிற்கு இவர் தான் தேவை…”
இப்படித்தான் சமூக வலைதளங்களில் இன்று காலை முதல் பொங்கி வருகின்றனர். #DKForCM என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
டிகே சிவக்குமார் vs சித்தராமையா
எப்படியும் இதில்
காங்கிரஸ்
கட்சியினர் தான் அதிக அளவில் இருப்பர். அதேசமயம் முதல்வர் நாற்காலிக்கான ரேஸில் சித்தராமையா இருக்கிறாரே என்ற கேள்வி எழுகிறது. இவர் முன்னாள் முதல்வர், கட்சியின் மூத்த தலைவர். நாளை (மே 12) நடக்கும் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சிக்கு போதிய பெரும்பான்மை கிடைக்கவில்லை எனில், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் ஆதரவை நாட வேண்டி வரும். அப்படி நடந்தால் முதல்வர் பதவி வேண்டும் என்று ஹெச்.டி.குமாரசாமி கேட்பார்.
காங்கிரஸ் வெற்றி
ஒருவேளை தனிப் பெரும்பான்மை பெற்றுவிட்டால் காங்கிரஸ் கட்சியை கையில் பிடிக்க முடியாது. தேசிய அளவில் காங்கிரஸ் உத்வேகம் பெற இந்த வெற்றி கைகொடுக்கும். அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைக்க வியூகம் வகுப்பர். இந்த அரசியல் கணக்குகள் ஒருபுறம் இருக்க கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்ற போட்டி உருவாகும்.
கர்நாடக முதல்வர் வேட்பாளர்
தற்போதைய சூழலில் சித்தராமையா, டிகே சிவக்குமார் ஆகிய இருவர் தான் ரேஸில் இருப்பதாக கூறுகின்றனர். இதில் ஒருவரை காங்கிரஸ் மேலிடம் தீர்மானிக்கும். அதாவது, சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் கூடி முடிவெடுப்பர். ஏற்கனவே சித்தராமையா 2013 – 2018 காலகட்டத்தில் 5 ஆண்டுகள் முதல்வராக இருந்துள்ளார்.
நெட்டிசன்கள் கோரிக்கை
எனவே டிகே சிவக்குமாருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என கட்சிக்குள் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். 60 வயதாகும் டிகே சிவக்குமார் அடுத்த 10 ஆண்டுகளுக்கு தீவிர அரசியலில் ஈடுபட முடியும். சித்தராமையாவிற்கு தற்போது 75 வயதாகிறது. எனவே அவர் வெற்றி பெற்றால் முக்கியமான துறையை ஒதுக்கி அமைச்சராக்கலாம் என அறிவுறுத்துகின்றனர். இணையத்தில் ட்ரெண்டாக்கி வரும் நெட்டிசன்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகுமா? என்பது டெல்லியின் கைகளில் இருக்கிறது.
தேர்தல் முடிவுகள்
நாளை தேர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில் இன்றே கர்நாடக அரசியல் களம் பரபரப்பாகி விட்டது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனையில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அடுத்தடுத்து அரசியல் நகர்வுகளுக்கு காத்திருப்போம்.