புதுடெல்லி: ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி உள்பட 68 கீழமை நீதிமன்ற நீதிபதிகளின் பதவி உயர்வை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த கீழமை நீதிபதிகள் 68 பேருக்கு பதவி உயர்வு வழங்க அம்மாநில உயர் நீதிமன்றம் அளித்த பரிந்துரையை ஏற்று அம்மாநில அரசு அவர்களை மாவட்ட நீதிபதிகளாக உயர்த்தியது. இதை எதிர்த்து ரவிகுமார் மஹெதா, சச்சின் பிரதாப் ராய் மேதா ஆகிய இரு மூத்த சிவில் நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை எம்.ஆர். ஷா தலைமையிலான அமர்வு விசாரித்து இன்று தீர்ப்பளித்தது.
அதில், “உயர் நீதிமன்றம் அளித்த பரிந்துரையை ஏற்று 68 பேரை மாவட்ட நீதிபதிகளாக உயர்த்திய மாநில அரசின் உத்தரவு சட்டவிரோதமானது. எனவே, இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மாவட்ட நீதிபதிகளாக பதவி உயர்வு பெற்ற 68 பேரும், தாங்கள் முன்பு வகித்த பதவிக்கே திரும்பச் செல்ல வேண்டும். இந்த வழக்கு பொருத்தமான அமர்வுக்கு மாற்றப்படும்” என நீதிபதி எம்.ஆர். ஷா தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.
நீதிபதி எம்.ஆர். ஷா, வரும் 15 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளதால் இந்த வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றப்பட இருக்கிறது. பதவி உயர்வு அளிக்கப்பட்ட 68 நீதிபதிகளில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்த நீதிபதியான ஹரிஷ் ஹஸ்முக்பாய் வர்மாவின் பெயரும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.