எத்தனை ஹிட் கொடுத்தாரு விஷால்? அவரே வரும் போது நடிகர் விஜய் வரக் கூடாதா.. செல்லூர் ராஜூ கேள்வி

மதுரை: ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்று பிறந்தநாள். இந்த பதவிக்கு வந்ததும் அவரது பிறந்தநாளை தொண்டர்களும் கட்சி நிர்வாகிகளும் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் மதுரையில் உள்ள கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தொண்டர்களுடன் கேக் வெட்டினார்.

அப்போது அவர் கூறுகையில் அமைச்சர் பிடிஆரிடம் இருந்து நிதித் துறை பறிக்கப்பட்டதற்கு ஆடியோதான் காரணமாக இருக்கும். தவளை தன் வாயால் கெடும் என்பதை போல பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கெட்டுள்ளார்.

இப்போது அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கினால், ஆடியோ விவகாரம் உண்மையாகி விடும் என்பதால் சாதாரண இலாகாவை கொடுத்துள்ளனர். நிதித் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள தங்கம் தென்னரசு சிறந்த நிர்வாகிதான். எந்த துறையிலும் அவர் முத்திரை பதிக்கக் கூடியவர். இன்றுள்ள அமைச்சர்களிலேயே பிறரை தரக்குறைவாக பேசாதவர்.

நிதி துறையிலும் அவர் சிறப்பாக செயல்படுவார். அவருக்கு பாராட்டுகள். ஓபிஎஸ் இல்லாமல் எடப்பாடியால் முதல்வராகியிருக்க முடியாது என்ற வைத்திலிங்க கூறியிருக்கிறார். இதை என்னிடம் கேட்டால் நான் என்ன சொல்வது. எதிர் முகாமில் உள்ளவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். பொறுத்திருந்து பாருங்கள்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் ஆட்சி அமைப்போம். எங்களுடைய ஒரே அரசியல் எதிரி திமுக மட்டும்தான். பாஜகவும் காங்கிரஸும் நண்பர்கள்தான். எப்போது வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாம். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா என கேட்கிறீர்கள். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.

ஒரு சில படங்கள் ஹிட் கொடுத்த விஷாலோ அரசியலுக்கு வருகிறேன் என சொல்லும் போது பல படங்கள் ஹிட் கொடுத்த நடிகர் விஜய் தாராளமாக அரசியலுக்கு வரலாம். நடிகர் கமல் மக்களுக்கு நல்லது செய்ய போவதாக சொல்லித்தான் மக்கள் நீதி மய்யத்தை ஆரம்பித்தார் . இப்போது நீதியும், மய்யமும எங்கே போனது என தெரியவில்லை.

Sellur Raju says that Actor Vijay can come to politics

எனவே நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து தேர்தலை சந்திக்கட்டும். அதன் பின்னரே அவருடைய செயல்பாடுகள் குறித்தும், அவருடன் கூட்டணி வைப்பதா என்பது குறித்தும் சொல்ல முடியும். இவ்வாறு செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். கடந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் மன்றத்தினர் நிறைய இடங்களில் வென்றனர். அந்த வகையில் இந்த முறை அம்பேத்கர் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடுமாறு விஜய் அறிவுறுத்தியிருந்தார்.

பொதுவாக அம்பேத்கர், பெரியாரை வைத்துதான் அரசியல் பேசுவார்கள். அந்த வகையில் இவர் அம்பேத்கரை கையில் எடுப்பதால் வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அரசியலுக்கு வருவாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பிடிஆர் நடித்தவர், பொருளாதார மேதை என நேற்றைய தினம் எடப்பாடி பழனிசாமி பாராட்டினார். இன்றோ செல்லூர் ராஜூ தங்கம் தென்னரசு எந்த துறைக்கு சென்றாலும் முத்திரை பதிப்பவர் என கூறியுள்ளார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.