பாஜகவில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் தலைவராக இருந்தவர் நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம். சமூக வலைதளங்களில் தனது கட்சியின் மாநில தலைவரான அண்ணாமலையை மறைமுகமாக விமர்சித்தால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு பாஜகவையும் தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலையையும் நேரடியாக விமர்சித்தும் தாக்கி பேசியும் வருகிறார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்து பேசினார். பால்வளத் துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசரை அமைச்சரவையிலிருந்து நீக்கியதற்கு பாஜக வரவேற்பு அளிப்பதாக கூறிய அண்ணாமலை, பழனிவேல் தியாகராஜனை நிதித்துறையில் இருந்து மாற்றியதை ஏற்க முடியாது என்றும் கூறினார்.
மேலும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பழனிவேல் தியாகராஜன் சிறப்பாக செயல்படுகிறார் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின் இப்போது அவரது இலாகாவை மாற்றுவதற்கு காரணம் என்ன? என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் ஆடியோ பிரச்சனைக்காக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மாற்றப்பட்டிருப்பதை ஏற்க முடியாது என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அண்ணாமலையின் பேச்சு குறித்து ரியாக்ட் செய்துள்ளார் காயத்ரி ரகுராம். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், மலிவாக ஆடியோ கசிந்த பிறகு பி. டி. ஆர். மாற்றப்பட்டதாக அண்ணாமலை நினைப்பதாக கூறியுள்ள காயத்ரி ரகுராம், இன்னும் பி.டி.ஆர் கட்சியில் இருக்கிறார் என்றும் இன்னும் அமைச்சராகவும் திமுக கட்சிக்காரராகவும் உறுப்பினராகவும் உள்ளார் என்றும் கூறியுள்ளார்.
மேலும் சொந்தக் கட்சிக்காரர்களை தூக்கி எறிவதற்கு பாஜகவை போல திமுக இல்லை என்றும் பொறாமை, பழிவாங்கும் மனப்பான்மையுடன் சொந்தக் கட்சிக்காரர்களை தூக்கி எறிவதற்கு ஸ்டாலின், அண்ணாமலை போல் மலிவான மனிதன் இல்லை என்றும் தனது டிவிட்டில் குறிப்பிட்டுள்ளார். உங்கள் மலிவான அரசியலுக்கு ஸ்டாலின் அடிபணிய மாட்டார் என்றும் திமுக அரசின் அமைச்சர் மாற்றம் குறித்து தலையிட அத்தகைய முட்டாள் மட்டுமே பேச முடியும் என்றும் கூறியுள்ளார்.
திமுக அமைச்சர் மறுசீரமைப்பில் அவர் எப்படி தலையிட முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ள காயத்ரி ரகுராம் மறுசீரமைப்பு தொடர்பாக ஆளுநர் உட்பட ஒரு வார்த்தை கூட கூற முடியாது என கூறியுள்ளார். மேலும் அண்ணாமலை தன்னைத் தானே ஒரு பெரிய தலைவராகக் கருதுவதும் ஒரு பெரிய சிரிப்பு என்றும் காயத்ரி ரகுராம் தனது டிவிட்டில் குறிப்பிட்டுள்ளார்.