சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் வரும் திங்கள்கிழமை உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், இந்த தீர்ப்பை செந்தில் பாலாஜி மட்டுமின்றி திமுகவினரே எதிர்நோக்கி காத்திருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த அவர், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் வேலை பெற்றுத் தருவதாக கூறி சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் செந்தில் பாலாஜி மீது பதிவு செய்த 3 வழக்குகளும் பல ஆண்டுகளாக எம்பி, எம்.எல்.ஏக்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை இருந்து வருகின்றன. இந்த வழக்கு தொடர்பாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் விசாரணைக்கு ஆஜராகுமாறு மத்திய அரசின் கீழ் செயல்படும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அமலாக்கத்துறையின் சம்மனை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது அமலாக்கத்துறை. இந்த வழக்கினை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணமுராரி, சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
கடந்த மார்ச் மாதம் நடந்த இந்த வழக்கின் விசாரணையின் போது, “செந்தில் பாலாஜிக்கு அனுப்பப்பட்ட சம்மனை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று அமலாக்கத்துறை வழக்கறிஞர் சஞ்சய் ஜெயின் வாதிட்டு இருக்கிறார். செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், அமலாக்கத்துறையின் வாதங்களை எதிர்த்து பல்வேறு தகவல்களை அடுக்கினார்.
இந்த வழக்கின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை வரும் திங்கள்கிழமை உச்சநீதிமன்றம் வெளியிடலாம் என்று சொல்லப்படுகிறது. அதேசமயம், இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பினை கொடுத்தால், செந்தில்பாலாஜிக்கு உடனடியாக எந்த சிக்கலும் ஏற்படாது.
இந்த வழக்கு சில மாதங்களுக்கு அடுத்தக்கட்ட மேல்முறையீடு என்று நீண்டுகொண்டே செல்லும். அதேபோல் 2 நீதிபதிகளும், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்துவிட்டால் எந்த சிக்கலும் அவருக்கு வராது. இரண்டு நீதிபதிகளும், அமலாக்கத்துறையின் சம்மனை ரத்து செய்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தால், செந்தில்பாலாஜிக்கு சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
இதில் குறிப்பாக அமலாக்கத்துறை செந்தில் பாலாஜிக்கு உடனடியாக சம்மன் அனுப்பி விசாரணைக்கு வரவழைப்பதற்கும் வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது. இதன் காரணமாகவே உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை செந்தில் பாலாஜி எதிர்நோக்கி இருப்பதாக கூறப்படுகிறது.