குமரி வாகன விபத்து; 4 பேர் பலி… தமிழக அரசு நிவாரணம் அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தி வரும் 3 பெண்கள் உள்பட 12 பேர் கொண்ட நடன குழுவினர் ஒரு காரில் நேற்று திருச்செந்தூருக்கு சென்று கொண்டிருந்தனர். நள்ளிரவு வரை நிகழ்ச்சியை நடத்திவிட்டு இன்று அதிகாலை அவர்கள் காரில் ஊருக்கு புறப்பட்டனர்.

ஆரல்வாய்மொழி அருகே நாகர்கோவில்-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வெள்ளமடம் பகுதியில் வளைவான சாலையில் கார் வந்தபோது ரோஸ்மியாபுரம் செல்லும் அரசு டவுன் பஸ் மீது நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் நான்கு பேர் பலியாகினர். மற்றவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், உயிரிழந்தவர்களுக்கும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் தமிழக அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.

அதுகுறித்த செய்திக்குறிப்பு;

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டம், செண்பகராமன்புதூர் கிராமம், லாயம் விலக்கு பகுதியில் இன்று (12-5-2023) காலை நாகர்கோவிலில் இருந்து ரோஸ்மியாபுரம் சென்ற பேருந்தும், திருச்செந்தூரிலிருந்து நாகர்கோவில் வந்த

நான்கு சக்கர வாகனமும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சதிஸ், த/பெ.ராமசாமி, கைதக்குழி காலனி, திருவிதாங்கோடு (வயது-37), கண்ணன், த/பெ.ராஜன் சிதறால் அருமனை (வயது-23), அஜித், த/பெ.சதிஸ்குமார், அம்பங்காலை, திருவரம்பு (வயது-22) மற்றும் அபிஷேக், த/பெ.பீர்கன், குழிச்சாணி, அருமனை (வயது-22) ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் படுகாயமடைந்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் சஜிதா, நெய்யாற்றின்கரை, கேரளா மாநிலம் (வயது-37), திரு.நிதிஸ் த/பெ.இராமசாமி, அம்பாங்காலை திருவரம்பு (வயது-22), திரு.விக்னேஸ், த/பெ.ஜெனில்குமார், காளச்சந்தை, மார்த்தாண்டம் (வயது-22), திரு.நிசாந்த், த/பெ.இராமசாமி, அம்பாங்காலை திருவரம்பு (வயது-18), சஜின் த/பெ.சஜிஸ்பாபு, கள்ளிக்கோட்டை சிதறால் (வயது-18) மற்றும் சிறுமி அனாமிகா, நெய்யாற்றின்கரை, கேரளா மாநிலம் (வயது-11) ஆகியோருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும், படுகாயமடைந்த தீவிர சிகிச்சை பெற்று வரும் ஆறு நபர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.