காலை சிற்றுண்டித் திட்டம் | சென்னை உட்பட 4 மாவட்டங்களில் மேலும் 320 பள்ளிகள் இணைப்பு: அதிகாரிகள் தகவல்

சென்னை: காலை சிற்றுண்டித் திட்டத்தில் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் 320 பள்ளிகள் புதிதாக இணைக்கப்பட உள்ளன. இதன் வாயிலாக, 357 பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. அதில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற உள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில், அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏற்படும் சத்துணவு குறைப்பாட்டை போக்கவும், அவர்கள் காலை உணவை உட்கொள்ளும் வகையில் காலை சிற்றுண்டித் திட்டம், கடந்தாண்டு துவங்கப்பட்டது. முதற்கட்டமாக, சென்னை, மதுரை போன்ற சில மாவட்டங்களில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. இதைதொடர்ந்து, 500 கோடி ரூபாய் மதிப்பில், அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என, கடந்த தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதில், மாநிலம் முழுதும் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.

சென்னை மாநகராட்சியில், திருவொற்றியூர், மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம் ஆகிய நான்கு மண்டலங்களில் முதற்கட்டமாக 37 பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் துவங்கப்பட்டது. இதில், 5,148 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.இவர்களுக்கு, எண்ணுாரில் இரண்டு; மாதவரம், கொடுங்கையூர், கொருக்குப்பேட்டை, ராயபுரம் ஆகிய ஆறு இடங்களில் ஒருங்கிணைந்த சமையல் கூடம் அமைக்கப்பட்டு உணவு தயாரித்து விநியோகிக்கப்படுகிறது. இத்திட்டம் பெற்றோர் மற்றும் மாணவர்களிடத்தில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இவற்றை அனைத்து தொடக்க பள்ளிகளிலும் விரிவுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: “பசியோடு பள்ளிக்கு மாணவர்கள் வருவதால், ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். இதனால், மாணவர்களுக்கு ஊட்டச்சத்தை அதிகரித்தல், பள்ளிக்கு வருவதை அதிகரித்தல், தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக காலை சிற்றுண்டித் திட்டம் துவங்கப்பட்டது.

இத்திட்டம், சென்னையில் தற்போது 37 பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது. அதேநேரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து 139 பள்ளிகள் சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் இணைக்கப்பட்டது. இதில், பெரும்பாலானவை தொடக்க பள்ளிகளாக உள்ளன. இதில் படிக்கும் மாணவர்கள் மற்றும் மாநகராட்சியில் ஏற்கனெவே உள்ள பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை சிற்றுண்டித் திட்டம் விரிவாக்கப்பட உள்ளது.

அதன்படி, 320 பள்ளிகள் புதிதாக இத்திட்டத்தில் இணைக்கப்பட உள்ளன. இதன் வாயிலாக, 357 பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. அதில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற உள்ளனர். இதற்கான, பொது சமையல் கூடங்கள் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல், எவ்வளவு மாணவர்கள் பயன்பெற உள்ளனர் போன்ற விபரங்களும், அதற்கான செலவினங்களும் ஆராயப்பட்டு வருகிறது. விரைவில், இப்பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் விரிவுப்படுத்தப்படும்”. இவ்வாறு அவர்கள் கூறினர்.

வழங்கப்படும் உணவு விபரம்

  • திங்கள் – அரிசி, கோதுமை ரவா, சேமியா ஆகிய ஒன்றுடன் காய்கறி சாம்பார்
  • செவ்வாய் – ரவா, சேமியா, சோள, கோதுமை ஆகியவற்றில் ஒரு காய்கறி கிச்சடி
  • புதன் – ரவா பொங்கல் அல்லது வெண் பொங்கல் காய்கறி சாம்பார்
  • வியாழன் – உப்புமா வகை உணவு
  • வெள்ளி – கிச்சடி ரவா கேசரி அல்லது சேமியா கேசரி

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.