பாலைவனக் காடுகள்!
பாலைவனம் என்று சொன்னாலே நம் அனைவருக்கும் உடனே ஞாபகம் வருவது ராஜஸ்தான் மாநிலமே. சிறு வயது முதலே இந்த கருத்து மனதிற்குள் வேரூன்றி விட்டதால், ராஜஸ்தான் என்றதும் பாலைவனம் என்ற நினைவு நம் கற்பனைக்குள் வந்துவிடுகிறது. ஆனால் உண்மையில் ராஜஸ்தானில் அடர்ந்த காடுகளும் இருக்கவே செய்கின்றன. அது போல, தமிழகத்தில் அனைத்து வளங்களும் கொண்ட அடர்ந்த காடுகள் இருந்தாலும் கூட இங்கும் பாலைவனங்கள் இருக்கின்றன.
சங்க இலக்கிய காலந்தொட்டு சுற்றுச்சூழல் மண்டலங்களை ஐந்து வகையாகப் பிரித்தபோது பாலை நிலமும் அதில் ஒரு முக்கிய இடத்தை பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழகத்தில் நெல்லை மாவட்டத்தில் மட்டுமே சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள ஐந்திணைகளையும் காண முடியும். தமிழகத்தின் குட்டி சஹாரா என்பது திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் சில பகுதிகளில் மட்டுமே காணப்படும் அரிய வகை சிகப்பு மணல் பரப்பைக் கொண்ட தேரி அல்லது தேரிக்காடுகளே.
தேரிக்காடுகளின் வரலாறு!
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆங்காங்கே சிறிய தேரிக்காடுகள் காணப்பட்டாலும், 5152.51 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட குதிரைமொழித் தேரி மற்றும் 899.08 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட சாத்தான்குளம் தேரி (மொத்தம் 6051.59 ஹெக்டேர்) ஆகிய தேரிக்காடுகள் வனச் சட்டங்களின் கீழ் பாதுகாக்கப்பட்ட காடுகளாக அறிவிக்கப்பட்டு, உச்சபட்ச பாதுகாப்பைப் பெறுகின்றன. அதனால் அங்குள்ள தேரிக் காடுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன.
சாத்தான்குளம் தேரிக்காடு என்பது அதன் அருகில் இருக்கும் சாத்தான்குளம் கிராமத்தின் பெயரைக் கொண்டு அழைக்கப்படுகிறது. ஆனால் குதிரைமொழித் தேரியின் பெயர் காரணத்திற்கு ஒரு சுவாரசியமான வரலாறு இருக்கிறது. அதாவது ஆங்கிலேயர்கள் ஆண்டபோது இந்தப் பகுதிக்குள் குதிரையில் வந்திருக்கிறார்கள். அப்போது அங்கிருந்த பிரம்மாண்டமான மணல் மேடுகள் அவர்களை பிரமிப்பை ஏற்படுத்திய நிலையில், அங்கு குதிரையில் பயணித்தபோது மணலுக்குள் குதிரைகளின் கால்கள், மொழிப்பகுதி வரை மூழ்கியுள்ளன. அதன் பிரம்மாண்டத்தை வியந்தபடியே ஆங்கிலேயர்கள் பயணித்த அந்தப் பகுதியே குதிரைமொழித் தேரி என அழைக்கப்படுவதாக அப்பகுதி மக்களிடம் வாய்மொழி வரலாறு இப்போதும் இருக்கிறது.
பரந்து விரிந்த மணல்மேடுகள் அதற்கு கொஞ்சமும் தொடர்பே இல்லாத நிலப்பரப்பின் நடுவே எவ்வாறு உருவாகியது, என்று உங்கள் மூளைக்குள் ஒரு கேள்வி உருவாகிறதா? நான் ஏற்கனவே கூறியது போல் பல இயற்கை காரணிகள் பல்லாயிரம் ஆண்டுகள் உழைத்ததன் விளைவே இந்த தேரிக்காடுகள். அதைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், திருநெல்வேலி, தூத்துக்குடியில் உள்ள இந்த பகுதியின் புவியியல் அமைப்பை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு வருடமும் மே முதல் ஆகஸ்ட் மாதம் வரை வீசும் தென்மேற்குப் பருவக்காற்று மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மகேந்திரகிரி பகுதி வழியாக வரும்போது அனைத்து ஈரப்பதத்தையும் விடுவித்துவிட்டு ஈரம் இல்லாத உலர்ந்த வறண்ட காற்றாக கிழக்கு நோக்கி நகர்கிறது.
வறண்ட காற்றாக கிழக்கில் பயணிக்கும் போது, திருநெல்வேலி மாவட்டத்தின் நாங்குநேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள செம்பொறை மண்ணை தனது அசாத்திய வேகத்தில் தூக்கியபடி கிழக்கு நோக்கிப் பயணிக்கிறது. அந்த செம்பொறை மணல் துகள்கள், கிழக்குப் பகுதிகளில் ஈரமான கடற்கரை காற்றைச் சந்திக்கும் போது, அதற்கு மேல் காற்றிலே மிதக்கும் சக்தியை இழந்து அங்கேயே நிலை கொண்டு விடுகின்றன. அதுவே மணல்மேடுகளாக உருமாறுகின்றன. மேலும் பல வருடங்களுக்கு முன்பாக சென்றால், தற்போது தேரிக்காடுகள் அமைந்திருக்கும் பகுதி முன்பொரு காலத்தில் கடலாக இருந்ததாகவும், புவியியல் மாற்றங்களால் கடல் உள்வாங்கி தேரிக்காடாக மாறிவிட்டதாகவும் ஆய்வறிஞர்கள் தெரிவிக்கின்றன. அதை மெய்ப்பிக்கும் வகையில், தேரிக்காடுகளின் நிலப்பரப்பைத் தோண்டும் போது, சில அடிகளிலேயே சுண்ணாம்பு பாறைகள் தென்படுகின்றன.
தேரிக் காடுகளைப் பொறுத்தவரையிலும், இயற்கையாக வளரும் தாவரங்களும், பனை மரங்களும், செயற்கையாக நடவு செய்யப்பட்ட மரங்களும் இருப்பதைக் காண முடியும். செயற்கையாக நடப்பட்ட மரங்கள் என்பது, இங்கு வசிக்கும் மக்கள் தங்களையும் தங்களின் நிலங்களையும் பாதுகாக்கும் நடவடிக்கையாக நடவு செய்யப்பட்டதாகும். தேரிப்பகுதிகளில் இருக்கும் மணல் மேடுகளின் அருகிலேயே விவசாயம் நடக்கிறது. அதனால் விவசாய நிலத்திற்குள் காற்று வேகமாக நுழைவதைத் தடுப்பதற்காக செயற்கையான மரங்கள் நடப்படுகின்றன. அவை உயரம் குறைந்ததாகவும், நிறைய கிளைகள் நிறைந்ததாகவும் இருக்கும். காரணம், காற்றின் அழுத்தத்தையும் வேகத்தையும் எதிர்த்து நின்று போராடி வளர வேண்டும் என்பதற்காகவே. அதிக உயரத்துடனான மரங்கள் நடப்பட்டால் காற்றின் வேகத்தைச் சமாளிக்க முடியாமல் முறிந்து விழும் வாய்ப்புகள் அதிகம். அதனால் உயரம் குறைவாக இருப்பதால் மணலில் வேரூன்றி வாழ்கின்றன.
தேரிக்காடுகளில் வளர்க்கப்படும் செயற்கை மரங்கள், மேற்கிலிருந்து வீசும் காற்று ஒவ்வொரு ஆண்டும் மணல் துகள்களைக் கொண்டு வந்து கொட்டிக் கொண்டே இருப்பதால் விவசாய நிலத்துக்குப் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் பணியையும் செய்கின்றன. அதற்காக அதிக கிளை பரப்பி வளரும் மரங்கள் நடப்படுகின்றன. அவை காற்றைக் கட்டுப்படுத்தி அதில் உள்ள மணல் துகள்களைத் தடுப்பதால் அவற்றைச் சுற்றிலும் மணல்மேடுகள் உருவாகி இருப்பதை நேரில் காணமுடியும். அதனால் நன்கு வளர்ந்த மரங்கள் கூட மணலுக்கடியில் புதைந்து, அதன் கிளைகள் மற்றும் மேற்பகுதி மட்டுமே வெளியே தெரியும்படியே இருப்பதைப் பார்க்க முடிகிறது. தேரிக் காடுகளின் சில இடங்களில் மிகவும் உயரமாக வளரக்கூடிய பனை மரங்களும் கூட மணலுக்குள் புதைந்த நிலையில் இருப்பதைக் காணலாம்.
பாலைவனச் சோலைகள்!
தேரிகளின் புற அழகைப் பற்றிப் பார்த்தாகி விட்டது. இனி அவற்றின் அக அழகைக் குறித்து பார்க்கலாம்.. தேரிகளின் பல்லுயிரினப் பெருக்கம் மிகவும் தனித்தன்மை வாய்ந்தது. ஊர்வன வகைகள் மிகுதியாகக் கொண்ட தேரிகளில், அந்த பகுதிக்கே உரித்தான விசிறித் தொண்டை ஓணான்களை அதிகமாகக் காண முடிகிறது.
தேரிக்காடுகளில் பாலைவன சோலைகளும் உண்டு. அவற்றில் மிகவும் முக்கியமானது குதிரைமொழித் தேரிக்காட்டின் நடுவே அமைந்துள்ள சுனை. அந்தச் சுனையின் அருகிலேயே நீர்நிலைகளைக் காக்கும் கடவுளான அருஞ்சுனை காத்த அய்யனார் கோயில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஏராளமான நீர் வாழ் பறவைகளைக் காணமுடிகிறது.
மழைக்காலங்களில், தேரிகளில் காணப்படும் பள்ளங்களில் மழை நீர் சேமிக்கப்பட்டு தற்காலிக பாலைவனச் சோலைகளும் உருவாவதுண்டு. இந்த பாலைவன சோலைகள் ‘தருவை’ என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. ஆனால், நம் கற்பனைகளில் பாலைவனங்கள் எப்போதுமே மிகவும் குறைந்த மதிப்பீட்டையே பெற்றிருக்கின்றன. அடர்ந்த காடுகளுக்கு அளிக்கும் மதிப்பை நாம் பாலைவனங்களுக்குக் கொடுப்பதில்லை என்பதே உண்மை. வறட்சி, பஞ்சம் மற்றும் ஏழ்மையின் குறியீடாகவே பாலைவனங்களைப் பார்க்கிறோம்.
பாலைவனங்களில் சொட்டுத் தண்ணீர் கூடக் கிடைக்காது என்பதே நம்மில் பலரின் உறுதியான நம்பிக்கையாக இருக்கிறது. ஆனால் தேரிக்காடுகள் என்பது அவ்வாறு பொதுமைப்படுத்தப்பட்ட பாலைவனங்களில் இருந்து வித்தியாசமானது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், தேரிக்காடுகள் மட்டும் இல்லையானால் தூத்துக்குடி மாவட்டத்தின் பெரும்பான்மையான பகுதிகளும், திருநெல்வேலி மாவட்ட தென் கிழக்குப் பகுதிகளும் வறட்சியில் உழன்று கொண்டிருக்கும் என்பதே நிதர்சனம். பார்ப்பதற்கு வெறும் மண்மேடுகளைப் போல காட்சியளிக்கும் தேரிகள் பல சூழலியல் சேவைகளை உலகிற்குச் செய்து வருகின்றன.
தேரி நிலத்தின் மேல் பகுதியில் காணப்படும் பொறை மண் மழைக்காலங்களில் அதன் மேல் விழும் நீரை முழுவதும் ஊடுருவச் செய்வதால் மழை நீர் வழிந்தோடி வீணாவது முழுமையாகத் தடுக்கப்படுகிறது. அப்படி ஊடுருவும் தண்ணீரானது மணலின் சில அடி ஆழத்தில் இருக்கும் களிமண் பரப்பு நிறுத்தி வைத்து, மணலுக்கடியில் ஒரு நீர்த்தேக்கம் போல செயல்பட வைக்கிறது. அந்த களிமண் பரப்புக்கு சில அடி ஆழத்தில் சுண்ணாம்புப் பாறைகள் இருப்பதால் எவ்வளவு காலமானாலும் தண்ணீர் கீழிறங்காமல் அடியிலேயே நிறுத்தி வைக்கப்படுகிறது. மணலுக்கடியில் தேக்கப்படும் மழைநீரைக் கொண்டு தேரிக் காடுகளின் சுற்றுப்புறங்களில் உள்ள நிலத்தடி நீர் மட்டம் சீராக நிற்கிறது.
தேரிக்காடுகள் மட்டும் இல்லை என்றால், அந்தப் பகுதிகளில் குடிநீர், விவசாயத் தேவைக்கு நீர் கிடைக்காத நிலை ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரம் பெருமளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கும். அதனால் தேரிகளைப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது. ஆனால், பாதுகாக்கப்படாத தேரிப் பகுதிகள் மற்றும் சில தனியார் தேரிக் காடுகளில் கனிம வளங்களுக்காக நடக்கும் வேட்டையைத் தடுக்க வன சட்டங்கள் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதுகாக்கப்பட வேண்டிய தேரிக்காடுகள் எனப்படும் இந்த பாலைவன காடுகள் மட்டும் இல்லை என்றால் உயிர்க் கோளத்தின் சமநிலை கேள்விக்குறியாகிவிடும்.
பாலைவனங்களைப் போலவே நம் மனதில் காடுகள் குறித்தும்… கற்பனையில் இடம் பெறாத கடல்கள் குறித்தும் அடுத்த அத்தியாயத்தில் நீந்துவோம்.