போதைக்கு அடிமையான சிறுவன் பெண் நீதிபதியை கத்தியால் குத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் போதை பழக்கத்திற்கு அடிமையாகி தனது தாயிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளான். ஒரு கட்டத்தில் விரக்தியான தாயார் தனது மகன் குறித்து போலீசிடம் புகார் அளித்தார்.
அதைத் தொடர்ந்து போலீஸார் சிறுவனை பிடித்து சிறார் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர். அன்றைய தினம் இரவு 10 மணி ஆகிவிட்டதால் சிறுவனை பெண் மாஜிஸ்திரேட் வீட்டிற்கு கொண்டு சென்று ஆஜர்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.
வீட்டில் வழக்கு குறித்து பெண் நீதிபதி விசாரித்த போது, திடீரென சிறுவன் தனது கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நீதிபதியை நோக்கி குத்த பாய்ந்தான். இதைக் கண்டு பெண் நீதிபதி மற்றும் சிறுவனின் தாயார் அலறினர்.
அதற்குள் போலீசார் சிறுவனை மடக்கி பிடித்து சிறுவனை கட்டுக்குள் கொண்டு வந்து வெளியே இழுத்து சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக அந்த பெண் நீதிபதி மாவட்ட நீதிபதியிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த சிறுவனை போலீசார் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
newstm.in