சேலம்: பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பெற்ற நந்தினி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
நந்தினியின் தாத்தா ஆறுமுகம் அதிமுக கிளைக்கழகச் செயலாளராக இருப்பதால், நந்தினி வேறு யாருமல்ல அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர் தான் என்பதை சூசகமாக அக்கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறையால் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த திங்கள்கிழமை அன்று வெளியிடப்பட்டது. இத்தேர்வில் மாநிலம் முழுவதும் 94.03 சதவிகிதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் மாணவிகள் 96.38 சதவிகிதமும், மாணவர்கள் 91.45 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல், அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்ற வணிகவியல் மாணவி நந்தினி, அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண்னான 600-க்கு 600 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதல் இடம் பெற்று வரலாற்று சாதனை படைத்தார்.
இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருந்தன. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், ரிசல்ட் வந்த அன்றே நந்தினியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி வாழ்த்து தெரிவித்தார்.
அடுத்த ஒரு நாளில் சென்னைக்கு சென்று முதலமைச்சர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து நந்தினி வாழ்த்து பெற்றார். அப்போது அவருக்கு சாக்லேட் கூடையை பரிசளித்து என்ன உதவி தேவைப்பட்டாலும் கேட்கலாம் என முதல்வர் நம்பிக்கை அளித்தார்.
இதேபோல் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் தொலைபேசி மூலம் நந்தினியை தொடர்பு கொண்டு வாழ்த்துக்கூறினார். கவிஞர் வைரமுத்து திண்டுக்கல்லில் உள்ள மாணவி நந்தினி வீட்டிற்கே சென்று தங்கப்பேனாவை பரிசளித்து பாராட்டினார்.
இந்த வரிசையில் மாணவி நந்தினி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை அவரது சேலம் இல்லத்தில் சந்தித்து இன்று வாழ்த்துப் பெற்றார். முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும், முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.பரமசிவமும் மாணவி நந்தினியை எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து பெற அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே அதிமுகவின் ட்விட்டர் பக்கத்தில் அதிமுக கிளைக் கழகச் செயலாளரின் பேத்தி நந்தினி எனக் குறிப்பிடப்பட்டிருப்பது தான் இங்கு கவனிக்க வேண்டியது.