சாதி கலவரங்களுக்குப் பின்னால் உள்ள தேர்தல் அரசியலையும் சீமைக்கருவேல மரங்களுக்குப் பின்னால் உள்ள கார்ப்பரேட் அரசியலையும் இரண்டு நண்பர்களின் வாழ்க்கை வழியாகப் பேசுகிறது `இராவண கோட்டம்’.
இராமநாதபுரம் மாவட்டம் ஏனாதி கிராமத்தில் மேலத்தெருவின் பிரதிநிதியாக ‘இயங்கும்’ பிரபுவும், கீழத்தெருவின் பிரதிநிதியாக ‘இருக்கும்’ இளவரசுவும் உயிர் நண்பர்கள். ஊர்த் தலைவரைப் போலச் செயல்படும் பிரபுவின் பேச்சுக்கு மொத்த ஊரும் கட்டுப்படுகிறது. மறுபுறம், உயிர் நண்பர்களான இளவரசுவின் மகனுக்கும் மேலத்தெருவைச் சேர்ந்த சாந்தனு பாக்யராஜுக்கும், அவரின் காதலியான ஆனந்தியால் சண்டை வருகிறது.
இதற்கிடையில், அம்மாவட்டத்தில் உள்ள கனிம வளத்தைக் கொள்ளையடிக்க, அரசியல்வாதிகளைக் கூட்டுச் சேர்த்து, சாதி கலவரத்தை உண்டாக்குகிறது கார்ப்பரேட்டுகளின் சூழ்ச்சி. இறுதியில், அரசியல்வாதிகளின் திட்டம் பலித்ததா, சாதி கலவரத்தால் அக்கிராமத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்ன, சாந்தனு, அவனது நண்பர் சஞ்சய் சரவணன், ஆனந்தி போன்ற அப்பாவி கிராமத்து இளைஞர்களின் வாழ்க்கையில் சாதி கலவரம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது போன்றவற்றைச் சொல்ல, உள்ளூர் அரசியலில் தொடங்கி உலக அரசியல் வரை இழுத்து திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் விக்ரம் சுகுமாரன்.
ஒரு கிராமத்து இளைஞனாகச் சேட்டைகளிலும், நையாண்டி பேச்சிலும் தன் நடிப்பால் கவரும் சாந்தனு, எமோஷனலான இடங்களிலும் இன்னும் உழைத்திருக்கலாம். வழக்கமான கிராமத்துக் காதலியாக வந்து போகிறார் கதாநாயகி ஆனந்தி. சாந்தனுவின் உயிர் நண்பனாக வரும் சஞ்சய் சரவணன் திரைக்கதையின் திருப்பத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறார். ஆனால், அக்கதாபாத்திரத்திற்கான நடிப்பில் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். யூகிக்கக் கூடிய வழக்கமான அந்த நண்பர் பாத்திரத்தில், வழக்கமான முகபாவனையையே வழங்கியிருக்கிறார். பிரதான வில்லனாக வரும் முருகன் சிறப்பான தேர்வு. தன் சிறப்பான நடிப்பால் மற்ற பாத்திரங்களிலிருந்து தனித்துத் தெரிகிறார். இவர்கள் தவிர பிரபு, இளவரசு, தீபா சங்கர், அருள்தாஸ், தெனப்பன், சுஜாதா சிவகுமார் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.
மேலத்தெரு, கீழத்தெரு என இரண்டாக இருக்கும் ஊர், எந்தச் சூழலிலும் மேலத்தெருவைச் சேர்ந்த போஸிற்குக் கட்டுப்படும் ஊர், கிராமத்து இளந்தாரிகளான சாந்தனு, சஞ்சய் சரவணனின் நட்பு, சாந்தனுவின் அத்தை மகள், ஊர்த் திருவிழா என நிதானமாகத் தொடங்குகிறது முதற்பாதி. ஆனால், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் அறிமுகத்தின்போதே, அது இறுதியில் என்னவாக முடியும் என்பதும் நமக்குத் தெரிந்துவிடுகிறது. திரைக்கதையும் எந்த ஏற்றமிறக்கமும் இன்றி, நாம் யூகித்தபடியே செல்கிறது.
அரசியல் கட்சிகளைப் புறக்கணிக்கும் கிராமம், ஊரின் பெரிய தலைக்கட்டான பிரபுவின் பேச்சைக் கேட்டு ஓட்டுப் போடும் மக்கள் என அந்தக் கிராமத்திலும் புதுமை இல்லை. அதனால், சுவாரஸ்யமாக ஏதேனும் நடக்குமா எனத் தேட வேண்டியுள்ளது. கிராமத்துத் திருவிழாவில் நடக்கும் நிகழ்ச்சிகள் மட்டும் கொஞ்சம் ஆறுதல் தருகின்றன.
ஒற்றுமையாக இருக்கும் கிராமத்தைப் பிரிக்கச் சாதி கலவரத்தைக் கையில் எடுக்க நினைக்கும் அரசியல்வாதிதான் பிரச்னை என நகர்ந்துகொண்டிருந்த திரைக்கதை, இரண்டாம் பாதியில் கருவேலமரம், கார்ப்பரேட்களின் கொள்ளை என தடம் மாறுகிறது. சாந்தனு – ஆனந்தி காதல், சாந்தனு சஞ்சய் மோதல், சாதியை வைத்து ஊரைப் பிரிக்க நினைக்கும் வில்லன்கள், கருவேலமரம் – கார்ப்பரேட் அரசியல் என இரண்டாம் பாதி திரைக்கதை பல கிளைகளாகப் பிரிகிறது. ஆனால், விறுவிறுவென வளரும் எந்த கிளையிலுமே சுவாரஸ்யமாகவோ ரசிக்கும்படியோ எதுவும் இல்லை. அதனால், முக்கிய கதாபாத்திரங்களின் மரணங்களும் கூட, பார்வையாளர்களுக்கு எந்தவித தாக்கத்தையும் தரவில்லை. இறுதிக்காட்சியும் அதீத நாடகத்தன்மையுடன் இருப்பது சோகத்திலும் சோகம்.
வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவு, படத்திற்குப் பெரும் பலம் சேர்த்திருக்கிறது. ஒரு இராமநாதபுர கிராமத்தின் வெயிலையும், வறட்சியையும் ஒப்பனைகள் அற்று, ‘ராவாக’ காட்டியிருக்கிறது. சில இரவுநேர காட்சிகளிலும் கவனம் பெறுகிறார். ஆனால், இறுதிக்காட்சிக்கு முந்தைய சண்டைக் காட்சிகளின் தொகுப்பில், இதுவரை இருந்த நேர்த்தி காணாமல் போகிறது. ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் பெரிதாக முணுமுணுக்க வைக்கவில்லை என்றாலும் சோதிக்காமல் கடந்து செல்கின்றன. ஆனால், எந்தப் புதுமையும் இல்லாது ஒலிக்கும் பின்னணியிசை, வெகுசில காட்சிகளுக்கு மட்டுமே கைகொடுத்திருக்கிறது.
இரண்டாம் பாதியில் படத்தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர் கொஞ்சம் கண்டிப்புடன் இருந்திருக்கலாம். விறுவிறுப்பான கதை நகர்வுகளுக்கு இடையே தேவையில்லாத காமெடி, காதல் காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம். வழக்கமான ‘அழகான’ கிராமத்து செட்அப்பில் இருந்து விலகி, கருவேலமரங்களுக்கு இடையே இருக்கும் ஊரின் அமைப்பை எதார்த்தமாகக் காட்டியதில் கலை இயக்குநர்கள் நர்மதா வேணியும், ராஜுவும் கவனம் ஈர்க்கிறார்கள்.
படத்தின் ஆக்கம் மட்டுமல்ல, படத்தின் பேசுபொருளும் அபத்தமாகவும், பிற்போக்குத்தனமாகவும் உள்ளது. மேலத்தெரு, கீழத்தெரு என அடிப்படையிலேயே இரண்டு சமூகத்தினரும் பிரிந்திருக்கிறார்கள், கோயில் பரிவட்ட மரியாதையும் மேலத்தெருவைச் சேர்ந்த பிரபுவிற்கே காலங்காலமாக வழங்கப்படுகிறது, அவரின் முடிவே இறுதியானதாகவும் இருக்கிறது. இத்தனை இருக்கையில், கிராமத்தில் சமத்துவம் இருப்பதாக, அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாக அடிக்கடி ஒரு கதாபாத்திரம் வந்து சொல்கிறது.
ஆதிக்க சாதியினரிடம் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களின் நியாயமான கேள்விகளை, உரிமைகளைக் கேட்பதைக் கூட, ‘கீழத்தெருவின் ரவுடித்தனமாக’ சித்திரிப்பதும், அந்த இடத்தில் அம்மக்களின் பக்கம் நிற்க வேண்டிய இளவரசு கதாபாத்திரம், ‘அவுக குடுத்ததாலதான்டா நீங்க எல்லாம் வாழ்றீங்க. அவுக இல்லனா நீங்களெல்லாம் இல்லடா’ என ஆதிக்க சாதியினரின் பக்கம் நின்று, அவர்களுக்கு ஆதரவாக வாதாடுவதும், அரசியல் கட்சிகள், அரசியல் இயக்கங்களோடு மக்கள் இணைந்து பெற்ற உரிமைகளை எல்லாம் மறந்துவிட்டு, பொத்தாம் பொதுவாக ‘அரசியல் கட்சிகள்’தான் சாதியை வளர்கின்றன எனப் பேசுவதும், இயக்குநரின் அரசியல், பகுத்தறிவு போதாமையையே காட்டுகிறது.
படத்தில் வரும் எல்லாக் கெட்டவர்களும் கீழத்தெருவில் இருக்கிறார்கள், எல்லா நல்லவர்களும் மேலத்தெருவில் இருக்கிறார்கள். அதேபோல கீழத்தெருவில் இருப்பவர்கள் தங்களின் உரிமைகளுக்குக் குரல் கொடுப்பதை விட்டுவிட்டு, மேலத்தெரு போஸ் கதாபாத்திரம் சொல்வதைக் கேட்பது ஊருக்கு நல்லது என்ற கருத்தையும் திணிக்க முயல்கிறார்கள். இதனைவிட உச்சமாக, அரசியல்வாதிகளின் சதித் திட்டத்துக்கும், வில்லனின் ஏமாற்று வேலைக்கும் கீழத்தெருவைச் சேர்ந்தவர்களே இசைந்துகொடுக்கிறார்கள், ஏமாறுகிறார்கள். இப்படியான அபத்தங்களால் இயக்குநர் எந்த நூற்றாண்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்ற கேள்வியும் எழுகிறது.
சொதப்பலான திரைக்கதை மட்டுமல்ல, இப்படிக் கிராமத்தைச் சித்திரிப்பதில் இருக்கும் இயக்குநரின் `நேர்மையின்மை’யும், `இராவண கோட்டத்தோடு’ நம்மை ஒன்றவிடாமல் செய்துவிடுகிறது.