காங்கிரஸ் 146 இடங்களில் வெற்றி பெறும் – கர்நாடக தலைவர் டி.கே.சிவகுமார் நம்பிக்கை

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 146 இடங்களில் வெற்றி பெறும் என்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடகத் தேர்தல் தொடர்பாக வெளியான பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் காங்கிரஸூக்கு சாதகமாக வந்துள்ளன. இந்தியா டிவி நிறுவனம் காங்கிரஸூக்கு 141 இடங்கள் கிடைக்கும் என தெரிவித்துள்ளது. இதுதவிர, மற்ற 3 நிறுவனங்களின் கருத்துக்கணிப்புகள் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தெரிவித்துள்ளன.

இந்நிலையில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் பெங்களூருவில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களிடம் கூறியதாவது: “எனக்கு தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக்கணிப்புகளில் நம்பிக்கை இல்லை. நான் மேற்கொண்ட கருத்துக்கணிப்புகளை மட்டுமே நம்புவேன். நான் முதலில் இருந்தே நாங்கள் 146 இடங்களில் வெற்றி பெறுவோம் என கூறி வருகிறேன். அதே எண்ணிக்கையில் இப்போதும் உறுதியாக இருக்கிறேன். எனவே தொங்கு சட்டப்பேரவை குறித்தோ, மஜதவுடன் கூட்டணி குறித்தோ பேச வேண்டிய அவசியம் இல்லை. தேர்தலில் தனிபெரும்பான்மையுடன் வென்று காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதி” இவ்வாறு டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.

கருத்துக்கணிப்புகளில் நம்பிக்கை இல்லை: இதற்கிடையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், ”தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பலமுறை பொய்யாகி உள்ளன. எனவே நான் கருத்துக்கணிப்புகளை நம்புவதில்லை. பிரதமர் நரேந்திர மோடியின் இரட்டை இன்ஜின் அரசுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். கர்நாடகாவில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும்” என தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.