சென்னை:
ப்ளஸ் 2 தேர்தலில் 600/600 மதிப்பெண் பெற்றதன் ரகசியத்தை தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவிடம் மாணவி நந்தினி பகிர்ந்துள்ளார். வறுமையில் இருந்தும் தன்னால் எப்படி சாதிக்க முடிந்தது என்பது குறித்து இதுவரை சொல்லாத சீக்ரெட்டை நந்தினி நெகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தினார்.
திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணவி நந்தினி தான் இன்றைக்கு டாக் ஆப் தமிழ்நாடாக மாறி இருக்கிறார். பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அவர் முழு மதிப்பெண்ணான 600/600 எடுத்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு தேர்வு வரலாற்றிலேயே இப்படி ஒருவர் முழு மதிப்பெண்ணையும் பெறுவது இதுவே முதல்முறை ஆகும்.
கூலி வேலை பார்த்து வரும் அவரது தந்தையின் சொற்ப வருமானத்தில்தான் அவர்களின் குடும்பம் நடந்து வருகிறது. இத்தனை வறுமைக்கு மத்தியிலும் நம்பிக்கையோடு படித்து சாதனை படைத்த நந்தினியை பலரும் பாராட்டி வருகின்றனர். இரு தினங்களுக்கு முன்பு கூட முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வீட்டுக்கு மாணவி நந்தினியையும், அவரது குடும்பத்தினரையும் வரவழைத்து பாராட்டினார். “அப்போது எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள்.. செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்” என முதல்வர் தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழக டிஜிபி சைலேந்திர பாபு மாணவி நந்தினியை தனது அலுவலகத்துக்கு இன்று வரவழைத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அதன் பின்னர் டிஜிபி சைலேந்திர பாபு நந்தினியிடம் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:
சைலேந்திர பாபு: 600-க்கு 600 மதிப்பெண் என்பது சாதாரண விஷயம் அல்ல. முதலில், சிறப்பாக படிக்க வேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்கு ஏன் வந்தது.. எப்படி வந்தது?
நந்தினி: நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு சிறு வயதில் இருந்தே இருந்தது. அதற்கு எனது குடும்ப சூழலும் ஒரு காரணமாக இருக்கலாம். குடும்பத்தின் வறுமை துவண்டு போக வைக்கும் விஷயமாக இருந்தாலும், நான் அதை அப்படி எடுத்துக்கொள்ளவில்லை. அதையே ஒரு தூண்டுதலாக எடுத்துக் கொண்டேன். குடும்பத்தில் நிலவிய வறுமைதான் என்னை சாதிக்க தூண்டியது.
சைலேந்திர பாபு: வறுமை தூண்டுதலாக இருந்தாலும், ஒரு காலத்துக்கு பிறகு படிப்பு போர் அடித்துவிடுமே.. ஆரம்பத்தில் இருக்கும் ஆர்வம் போக போக குறைந்துவிடும். நீண்டகாலமாக இந்த எண்ணத்தை உங்களால் எப்படி தக்க வைக்க முடிந்தது?
நந்தினி: என் மீது எனது குடும்பத்தினரும், பள்ளி நிர்வாகமும் வைத்திருந்த நம்பிக்கையே எனக்கு நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தக்க வைக்க உதவியது. அவர்கள் கொடுத்த ஊக்கம்தான் என்னை சாதிக்க வைத்தது.
சைலேந்திர பாபு: எல்லா பெற்றோரும் தான் ஊக்குவிக்கிறார்கள். ஆனால் எல்லோருக்கும் அந்த ஊக்கம் வருவதில்லையே.. அதற்கு என்ன காரணம்?
எனக்கு உள்ளே இருக்கும் தன்னம்பிக்கையை எப்பொழுதும் விட்டுவிட கூடாது என்பதில் கவனமாக இருப்பேன். குடும்ப வறுமையை காரணம் காட்டி, படிப்பை நிறுத்தி சாதாரண வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் இருந்தது கிடையாது. நாமளும் சாதித்துக் காட்டணும். நாங்களும் சொந்தக் காலில் நிற்கனும் என்ற ஆசை என்னுள் எரிந்து கொண்டே இருந்தது. நம்பிக்கை குறையும் போது என்னை நானே ஊக்கப்படுத்திக் கொள்வேன். எனக்கு நானே பேசிக் கொள்வேன். இந்த self motivation தான் எனது வெற்றியின் ரகசியம் என நந்தினி தெரிவித்தார்.
நந்தினியை போல வாழ்க்கையில் சாதிக்க துடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அவர் கூறிய Self motivation சீக்ரெட் நிச்சயம் உதவும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.