யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் பரம்பல் அதிகரித்து வருகின்ற நிலையில் தற்போதைய காலநிலை காரணமாக டெங்கு நோய் பரப்பும் நுளம்புகள் அதிகரிப்பதற்கு அபாயநிலை காணப்படுகின்றது.
இதனை கருத்தில் கொண்டு மே மாதம் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் யாழ் மாவட்டத்தில் விசேட நுளம்பு கட்டுப்பாட்டு செயற்திட்டத்தினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக யாழ் மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கையினை முன்னெடுக்காதுவிடின் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அடுத்துவரும் மாதங்களில் அதிகரித்துச் செல்லும் என அஞ்சப்படுகின்றது.
சுகாதார திணைக்களம், உள்ளூராட்சி சபைகள், பிரதேச செயலகம் இணைந்து கழிவு நீர் தேங்கிநிற்கும் பொருட்களை உரிய முறையில் அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இச் செயற்திட்டம் தொடர்பான கால அட்டவணை கிராமசேவகர் ஊடாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும். எனவே பொதுமக்கள், பொது அமைப்புக்கள் எடுக்கப்படும் நடவடிக்கைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு யாழ் மாவட்ட செயலகத்தினால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.