சென்னை : ருத்ரன் படத்தின் பாடலுக்கு ஆடிய நடன கலைஞர்களுக்கு சம்பளம் வழங்காமல் இழுத்தடிப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ராகவா லாரன்ஸ் நடித்த ருத்ரன் திரைப்படம் தமிழ் புத்தாண்டு அன்று திரையரங்கில் வெளியானது.
இதில், பிரியாபாவனி சங்கர், பூர்ணிமா பாக்கியராஜ்,நாசர், சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
ருத்ரன் : நடன இயக்குனர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகம் கொண்ட ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த ருத்ரன் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கணிசமான வசூலையும் பெற்றது. நீண்ட நாட்களுக்கு பின் வில்லனாக நடித்த சரத்குமாரின் நடிப்பை அனைவரும் பாராட்டி உள்ளனர்.
ஜிவி பிரகாஷ் : இந்த படத்தை 5 ஸ்டார் தயாரிப்பாளர் கதிரேசன் தான் இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் மூலம் தான் இவர் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். இப்படத்திற்கு ஜிபி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பழைய பாடலான பாட்டெல்லாம் பாடலை இன்றைய தலைமுறையினரும் ரசித்து கேட்டுவருகின்றனர்
சம்பள பாக்கி : இந்த நிலையில் படத்தின் பாடலுக்கு ஆடிய நடன கலைஞர்களுக்கு சம்பளம் வழங்காமல் இழுத்தடிப்பதாக கூறி சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரில் ருத்ரன் படத்தின் கிளைமாக்ஸ் பாடலுக்கு நடனமாட துணைநடிகர்கள் மற்றும் நடன கலைஞர்களை ஏற்பாடு செய்து கொடுத்தேன்.
இழுத்தடிக்கிறார்கள் : படப்பிடிப்பு முடிந்து பல நாட்கள் ஆகியும் அவர்களுக்கான சம்பளம் வழங்கப்படவில்லை. இது குறித்து ஏஜென்ட் ஸ்ரீதர் என்பவரிடம் கேட்டதற்கு நாளைக்கு வா, இப்போது இல்லை என என்று இழுத்தடித்தார். எங்களுக்கு வாடகை கொடுக்கக்கூட வழியில்லாமல் இருக்கிறோம். இதனால், சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளோம்.
பெப்சியில் புகார் : இது குறித்து திரைப்படத்தின் மேலாளரிடம் பேசினேன் அவர் கடுமையாக நடந்துகொண்டார். தொடர்ந்து பெப்சி அலுவலகத்திலும் புகார் கொடுத்தேன் ஆனால் எந்த பலனும் இல்லை. 10 நாட்கள் உழைத்த நடன கலைஞர்களுக்கு அதற்கான சம்பளத்தை வழங்காமல் இழுத்தடித்து வரும் ஸ்ரீதர் மற்றும் மேனேஜர் மீது தக்க நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுதர வேண்டும் என்று அந்த புகார் மனுவில் நடன அமைப்பாளர் ராஜ் குறிப்பிட்டுள்ளார்.