அரூர் பகுதிகளில் பாக்கு மரக்கன்று நடுவதில் விவசாயிகள் ஆர்வம் – நடப்பாண்டில் சுமார் 1.50 லட்சம் மரக்கன்றுகள் வளர்ப்பு

அரூர்: தருமபுரி மாவட்டத்தில் மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளதால் விவசாயமே மாவட்ட பொருளாதாரத்தின் மிக முக்கியமான பிரிவாக விளங்குகிறது.

மாவட்டத்தில் உள்ள மொத்த பரப்பளவான 4 லட்சத்து 50 ஆயிரம் ஹெக்டேரில் 1 லட்சத்து 95 ஆயிரத்து 740 ஹெக்டேர் சாகுபடி பரப்பாகக் கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஓரளவு நீர்வளம் மற்றும் மண்வளம் மிக்கப்பகுதிகளை கொண்டுள்ளது, அதனால் இப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் மாறிவரும் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதிலும் பயன்படுத்துவதிலும் முன்னோடியாக விளங்கி வருகின்றனர்.

தென்பெண்ணை ஆற்று நீர் பிடிப்பு பகுதிகளில் உள்ள கம்பைநல்லூர், ஈச்சம்பாடி அனுமன் தீர்த்தம் உள்ளிட்ட பகுதிகளிலும் வாணியாறு அணை மற்றும் அதன் கால்வாய்கள் செல்லும் பகுதிகளான மோளையானூர், பாப்பிரெட்டிப்பட்டி, பூனையானூர், மஞ்சவாடி, பாப்பம்பாடி, புதுப்பட்டி, வள்ளி மதுரை அணைக்கட்டு அமைந்துள்ள கீரைப்பட்டி, அச்சல் வாடி, தாதரவலசை, வாச்சாத்தி, வீரப்பநாய்க்கன் பட்டி, தாதம்பட்டி, தென்கரைக்கோட்டை, ராமியம் பட்டி,தீர்த்தமலை உள்ளிட்ட பகுதிகளிலும் ஏற்கனவே கடந்த பல வருடங்களாக ஆங்காங்கு பாக்கு விவசாயத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 4 வருட காலமாக அரூர், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளிலும் ஓரளவு நல்ல மழை பெய்துள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து நீர் பற்றாக்குறை நீங்கியுள்ளது. தற்போதைய காலச் சூழலில் விவசாயப் பணிக்கான கூலி ஆட்கள் பற்றாக்குறை, போதிய வருவாய் இல்லாமையால் பாக்கு பயிரிடுவதில் கடந்த இரு ஆண்டுகளாக விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கடந்த ஜூன்- ஜூலை தொடங்கிய பருவ மழை காலம் தொடங்கி தற்போது வரை மட்டும் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் அளவிற்கு 160 ஏக்கர்களில் பாக்கு நடவு செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு குறைவு, குத்தகைக்கு விடுவதால் லாகபரமான நிரந்தர வருவாய் ஆகியவற்றின் காரணமாக தென்னைமரக்கன்று நடுவதில் விவசாயிகள் பெரும் ஆர்வம் காட் டி வருகின்றனர். 5 முதல் 6 ஆண்டுகளில் பயன் தரக்கூடிய பாக்கு மரங்களால் ஏக்கருக்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ 3 முதல் 5 லட்சம் வரை வருவாய் கிடைக்கும் வாய்ப்புள்ளதால் பாக்கு கன்று நடவில் ஈடுபட்டு வருகின்றனர்.

இளங்கன்றுகளை வெயிலில் இருந்து காக்க வாழை கன்று பக்க கன்றாக வளர்த்தும், ஓராண்டு காலத்திற்கு பாதுகாத்து பின்னர் கன்றுகளை பராமாித்து வுருகின்றனர். இதுகுறித்து தோட்டக்கலை அதிகாரிகள் கூறுகையில், கடந்த மூன்று ஆண்டுகளில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் பாக்கு நடவு அதிகரித்துள்ளது. அதிலும் கடந்த ஜீன் மாதத்திற்கு பிறகு சுமார் 160 ஏக்கரில் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேலாக இளங்கன்றுகள் நடப்பட்டுள்ளது.

இவைகள் இன்னும் 3 முதல் 5 ஆண்டுகளில் பலன் தரும் நிலையில் பாக்கு உற்பத்தியும் அதிகரிக்க கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதிலும் மலையடிவாரங்களை ஒட்டி அமைந்துள்ள கிராமங்களில் நீர் தட்டுப்பாடு குறைவு என்பதால் அப்பகுதிகளில் தற்போது விவசாயிகள் அதிக ஈடுபாடு காட்டி வருவதாக தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.