புதுடில்லி தென்கிழக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள, ‘மோக்கா’ புயல், அதிதீவிர புயலாக உருமாறி உள்ளதால், மேற்கு வங்கத்தில் 200க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள மோக்கா புயல், தென்கிழக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதியில் அதிதீவிர புயலாக உருவாகி உள்ளது.
இது, நாளை மேலும் தீவிரமடைந்து வங்கதேசம் – மியான்மர் எல்லையில் மணிக்கு 150 – 160 கி.மீ., வேகத்தில் கரையை கடக்கும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
எனவே, மத்திய மற்றும் வடகிழக்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அந்தமான் தீவுகளில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில வடகிழக்கு மாநிலங்களுக்கும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திரிபுரா, மிசோரம் மாநிலங்களில் நாளை முதல் பலத்த மழையும், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் தெற்கு அசாம் பகுதிகளில் ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மேற்கு வங்க மாநிலத்தில் அவசர நிலையை கையாள, தேசிய பேரிடம் மீட்பு படையின் எட்டு குழுக்கள், 200க்கும் மேற்பட்ட வீரர்களுடன் தயார் நிலையில் உள்ளன. மேற்கொண்டு 100 வீரர்கள் தயாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள கடல் பகுதிகளில், கடலோர காவல் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுஉள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement