புதுடெல்லி: 2023-ம் ஆண்டுக்கான தேசிய தொழில்நுட்ப தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி ரூ.5,800 கோடி மதிப்பிலான அறிவியல் திட்டங்களை நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:
இந்திய வரலாற்றில் மே 11 மிகவும் மதிப்புமிக்க நாட்களில் ஒன்று. இந்திய விஞ்ஞானிகள் பொக்ரானில் நிகழ்த்திய மகத்தான சாதனை ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்படுத்தியது.
இந்தியாவின் வெற்றிகரமான அணுகுண்டு சோதனை அறிவிப்பை வாஜ்பாய் வெளியிட்ட நாளை என்னால் மறக்க இயலாது.
பொக்ரான் அணு ஆயுத சோதனை இந்தியாவின் அறிவியல் திறன்களை சர்வதேச நாடுகளுக்கு நிரூபிக்க உதவியது மட்டுமின்றி, நாட்டின் உலகளாவிய அந்தஸ்தையும் உயர்த்தியது.
இந்தியா தொழில்நுட்ப துறையில் முழுமையான மற்றும் 360 டிகிரி அணுகுமுறையுடன் முன்னேறி வருகிறது. தொழில்நுட்பத்தை தேசத்தின் முன்னேற்றத்திற்கான ஒரு கருவியாகவே இந்தியா கருதுகிறது. மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான வழிமுறையாக அதனை கருதவில்லை.
விசாகப்பட்டினத்தில் உள்ள ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், நவி மும்பை தேசிய ஹாட்ரான் பீம் தெரபி வசதி மற்றும் கதிரியக்க ஆராய்ச்சி பிரிவு, மும்பை பிளவு மாலிப்டினம்-99 உற்பத்தி வசதி, விசாகப்பட்டினம் அரிய பூமி நிரந்தர காந்த ஆலை உள்ளிட்டவை நாட்டின் முன்னேற்றத்துக்கு உந்துதலைக் கொடுக்கும்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் இளம் விஞ்ஞானிகள் பள்ளிகளை விட்டு வெளியே வந்து தங்களது திறமைகளை மூலைமுடுக்கெல்லாம் நிரூபித்து வருகின்றனர். அவர்களை கைபிடித்து அழைத்து செல்வதும், திறமைகளை வளர்க்க உதவுவதும்தான் நமது அனைவரின் தற்போதைய கடமை. ஸ்டார்ட் அப் இந்தியா பிரச்சாரம், டிஜிட்டல் இந்தியா மற்றும் தேசிய கல்விக் கொள்கை ஆகியவை இந்தியா புதிய உயரங்களை எட்ட உதவுகின்றன. 10 ஆண்டுகளுக்கு முன்புஆண்டுக்கு 4,000 ஆக இருந்த காப்புரிமைகள் இன்று 30,000 ஆக அதிகரித்துள்ளன. வடிவமைப்புகளின் பதிவு 10,000 லிருந்து 15,000 ஆக அதிகரித்துள்ளன.
மேலும், உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டு தரவரிசையில் 81 வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 40 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.