நாடு முழுவதும் இன்று சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த ஆண்டு, 12 ஆம் வகுப்பில் 87.33 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல, 10 ஆம் வகுப்பில் 93.12 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு ஆண்களை விட பெண்கள் 1.98 சதவீதம் தேர்ச்சி பெற்று முன்னிலை வகிக்கின்றனர்.
மண்டலம் வாரியாக கேரளா முதல் இடத்தை பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து பெங்களூரு இரண்டாவது இடத்தையும், தமிழ்நாடு மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. மூன்று முதல் இடங்களும் தென் மாநிலங்களில் பதிவாகியிருப்பது கவனிக்கத்தக்கது.
தமிழகத்தில் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று வேலூர் காட்பாடி மாணவி ரேவா முதல் இடத்தை பிடித்துள்ளார்.
சிபிஎஸ்இ பிளஸ்2 முடிவுகளில் குஜராத், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா உட்பட பாஜக ஆளும் வடமாநிலங்கள் பின்னடைவை சந்தித்துள்ளன. குறிப்பாக, தேர்ச்சி விழுக்காடு தரவரிசை பட்டியலில் யோகி ஆதித்யநாத் ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் இடம்பெறவில்லை அதேபோல, 13 மண்டல பட்டியலில் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தும் பின்னடைவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி ‘ வெற்றி பெற்ற மாணவர்களின் கடின உழைப்பை நினைத்து நான் பெருமைபடுகிறேன்’ என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று பதிவிட்டுள்ள ட்வீட்டில், சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர்ந்து நன்கு படித்து உங்கள் பெற்றோரையும், நாட்டையும் பெருமைப்படுத்த எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு சிலர், தேர்ச்சி பெறத் தவறியிருந்தாலும், துவண்டு விடாமல், உங்கள் அடுத்த முயற்சியில் நன்கு செயல்பட்டு, சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என இவ்வாறு கூறியுள்ளார்.