புதுடெல்லி: திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லியின் முக்கிய தாதாவான தில்லு தாஜ்புரியா கடந்த மே 2-ம் தேதி எதிர் கோஷ்டியை சேர்ந்த சக கைதிகளால் அடித்துக் கொல்லப்பட்டார்.
இச்சம்பவத்தின் காட்சிப் பதிவுகள், சமுக வலைதளங்களில் வைரலாகின. இதில் திஹார் சிறையில் பாதுகாப்பு பணியை ஏற்றுள்ள தமிழகக் காவல் படையின் 7 காவலர்கள் வேடிக்கை பார்த்ததாகப் புகார் எழுந்தது. இதற்காக அவர்களை தமிழகம் திருப்பி அனுப்பி நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டது. இதனால் அந்த 7 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர்கள் மீது விசாரணை நடைபெறுகிறது.
இந்நிலையில் தில்லு அடித்துக்கொல்லப்பட்டபோது திஹார் சிறையின் வார்டன்கள் உள்ளிட்ட பிற காவலர்களும் இருந்தனர். இதனால் அவர்களும் அச்சம்பவத்திற்கு பொறுப்பாகக் கருதப்பட்டது. எனினும் தமிழக காவல் துறை மேற்கொண்டது போல் இவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படவில்லை. மாறாக, இடமாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் உதவி காவல் ஆணையர், துணை ஆணையர், தலைமை வார்டன், வார்டன்கள் உள்ளிட்ட 99 பேரை திஹார் சிறையின் தலைமை இயக்குநரான சஞ்சய் பெனிவால் இடமாற்றம் செய்துள்ளார்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் திஹார் சிறை வட்டாரம் கூறும்போது, “உயர் பாதுகாப்பு அறையிலிருந்த தில்லுவின் படுகொலையில் டெல்லி அரசு தீவிர நடவடிக்கை எடுக்க விரும்புகிறது. இதில் மேலும் பலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். இப்பிரச்சினையை மையமாக வைத்து சிறையை சீர்படுத்தும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட உள்ளன” என்று தெரிவித்தனர்.
ஆசியாவின் மிகப்பெரிய சிறையான இதன் வளாகம், டெல்லியில் திஹார், ரோஹினி, மண்டோலி ஆகிய மூன்று இடங்களில் உள்ளது. இதன் மூன்று கட்டப் பாதுகாப்பின் நடுவே தமிழகக் காவல் படையின் 8-வது பட்டாலியன் பணியமர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச கொலையாளியான சார்லஸ் சோப்ராஜ், கடந்த 1986-ல் திஹார் சிறையிலிருந்து தப்பியதை தொடர்ந்து, விசாரணை அறிக்கையின் பரிந்துரைப்படி இந்தி மொழி அறியாத தமிழக காவல் படையின் சுமார் 1200 காவலர்கள் இங்கு பணியாற்றி வருகின்றனர்.
இதனிடையே, திஹார் சிறையை சீர்படுத்த வேண்டி சில சட்டதிருத்தம் செய்யவும் டெல்லி அரசுக்கு சிறை நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது. இதில் அளவுக்கு அதிகமாக உள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைக்கவும் விசாரணைக் கைதிகளை வேறு சிறைகளுக்கு மாற்றவும் யோசனை அளிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இங்குள்ள காவலர்களுடன் கைதிகள் நட்பு ஏற்படுத்திக்கொண்டு சகல வசதிகளும் பெறுவதாகப் புகார் உள்ளது. இதனால், வெளிமாநிலங்களில் குற்றம் செய்பவர்களும் திஹார் சிறையில் தஞ்சம்பெற, டெல்லிக்கே வந்து கைதாவதும் வழக்கமாகி விட்டது. இதன் காரணமாக 10,026 கைதிகள் இருக்கவேண்டிய திஹாரில் தற்போது 20,558 கைதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.