ஆளுநர் ஆர்.என்.ரவி என்றாலே புதுசா எதும் சர்ச்சையாக பேசிட்டாரா? என்ற கேள்வியை தான் பலரிடம் இருந்து கேட்க முடிகிறது. சமூக வலைதளங்களிலும் விமர்சனக் கருத்துகளுக்கு பஞ்சமில்லை. சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளும் திமுக அரசிற்கு தலைவலியாய் இருப்பது ஒருபுறம், சித்தாந்த ரீதியில் பேசி சர்ச்சைகளை கொளுத்தி போடுவது மறுபுறம் என செயல்பட்டு வருவதாக அரசியல் கட்சிகள் பலவும் குற்றம்சாட்டுகின்றன.
ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டி
சமீபத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு பேட்டியளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, திராவிட மாடல் என எதுவுமே இல்லை. அது ஒரு காலாவதியான கொள்கை. அதை புதுப்பிக்க தான் முயற்சி செய்து வருகின்றனர். ஒரே நாடு, ஒரே பாரதம் என்ற கொள்கைக்கு எதிரானது திராவிட மாடல் எனப் பேசியிருந்தார். மேலும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு பதிலடி, சிதம்பரத்தில் குழந்தை திருமணங்கள், சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் போது நடந்த சர்ச்சை உள்ளிட்டவற்றை பேசி சலசலப்பை ஏற்படுத்தினார்.
வெடிக்கும் திமுக கூட்டணி
ஆளுநரின் பேச்சிற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒவ்வொரு கட்டத்திலும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றன. சில சமயங்களில் போராட்டங்கள் நடத்தி விஷயத்தை சீரியசாகவும் மாற்றி விடுகின்றனர். இந்நிலையில் தான் புதிதாக ஒரு விஷயத்தை பேசி மீண்டும் ஒருமுறை தலைப்பு செய்தியாக மாறியிருக்கிறார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கல்லூரி மாணவர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குழந்தை திருமணம்
அதில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, நான் மிகவும் சிறு வயதிலேயே திருமணம் செய்து கொண்டேன். எனக்கு நடந்தது குழந்தை திருமணம். நானும், எனது மனைவியும் ஒன்றாகவே வளர்ந்தோம். என் மனைவி கல்லூரிக்கு சென்று படிக்கவில்லை. ஆனால் எனது வலிமைக்கு அடித்தளமாக நின்றார். இந்த உலகத்தை என்னால் சமாளித்து கொள்ள முடியும்.
என் மனைவி தான் எல்லாம்
நான் வீட்டிற்கு திரும்பும் போது எனக்காக உடன் நிற்கும் ஒரே ஜீவன் எனது மனைவி தான். வேறு எதுவும் தேவையில்லை. எந்த ஒரு ஆலோசகரோ, நமக்கு உத்வேகம் அளிக்கக் கூடியவரோ. யாரும் வேண்டாம். வேதத்தில் சொல்லி இருப்பதை தான் இங்கே கூற விரும்புகிறேன். நீங்கள் தான் உங்களின் சிறந்த நண்பர். நீங்களே உங்களின் மோசமான எதிரி என்று பேசியுள்ளார்.
இதற்கு சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. குழந்தை திருமணம் என்பது சட்ட விரோதம். இப்படிப்பட்ட ஒரு செயலை செய்துவிட்டு அதை பெருமையாக கூறுகிறாரே என்று நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர். ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சு தவறான முன்னுதாரணமாக அமைந்து விடாதா? எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.