அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

சென்னை: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் காலியாக உள்ள பேராசிரியர், இணைப் பேராசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டுமென்று மருத்துவர்கள் கோருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 1,200 பேராசிரியர், 1,400 இணைப் பேராசிரியர் பணியிடங்கள் உள்ளன.

மருத்துவர்களுக்கு 2 ஆண்டுகளாகப் பதவி உயர்வு வழங்கப்படாததால் 450 பேராசிரியர், 550 இணைப் பேராசிரியர் பணியிடங்களும் காலியாக இருக்கின்றன. காலி பணியிடங்களால் பதவி உயர்வு கிடைக்குமெனப் பலர் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இதற்கிடையில், மருத்துவக் கல்லூரிகளில் 10 சதவீத இடங்கள் மட்டுமே காலியாக இருப்பதற்குத் தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

ஆனால், 30 சதவீத இடங்கள் இரு ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருப்பதால், மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக அரசு மருத்துவர்களிடம் கேட்டபோது, “அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2 ஆண்டுகளாக பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காத நிலையில், தற்போது உயர் நீதிமன்றத்தில் உள்ள தடை உத்தரவைக் காரணம் காட்டி அரசு கிடப்பில் போட்டுள்ளது. வருங்காலங்களில் பதவி உயர்வு வழங்காத பட்சத்தில், தேசிய மருத்துவ ஆணைய ஆய்வின்போது அரசு மருத்துவர்கள் ஒத்துழைக்க மாட்டார்கள். எனவே, நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பதவி உயர்வை, முன் தேதியிட்டு அரசு வழங்க முன்வர வேண்டும்” என்றனர்.

மாநிலம் முழுவதும் போராட்டம்: இதற்கிடையில், தமிழகத்தில் அரசாணை 293-ஐ பின்பற்றி மருத்துவர்களின் பணிக்கேற்ப ஊக்கத் தொகையை அமல்படுத்த வேண்டுமெனத் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். அரசாணை 293-ஐ அமல்படுத்தாவிட்டால் வரும் 29-ம் தேதி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படுமெனச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.