சென்னை:
தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தவறான விஷயத்தை சொல்கிறது என்றால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் அந்த படத்தை வாங்கியது ஏன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய தி கேரளா ஸ்டோரி திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் முஸ்லிம்களுக்கு எதிராக எடுக்கப்பட்டதாக கூறி கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்தப் படத்துக்கு தடைவிதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்திலும் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், கருத்து சுதந்திரத்தில் தலையிட முடியாது எனக் கூறி அந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இதனால் தற்போது தி கேரளா ஸ்டோரி திரைப்படம் பல திரையரங்குகளில் ஓடி வருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை இந்த திரைப்படத்துக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதே சமயத்தில், பாஜக தலைவர்கள் பலர் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தி கேரளா ஸ்டோரி திரைப்படம் குறித்து அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தடை செய்வது பிரச்சினை இல்லை. ஆனால், யார் தடை செய்கிறார்கள் என்பதுதான் முக்கியம். இந்தியாவில் எந்த மாநில அரசும் ஒரு திரைப்படத்தை தடை செய்ய முடியாது. நீதிமன்றங்கள் மட்டுமே தடை செய்ய முடியும். ஆனால், கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திரையிட உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டு இருக்கிறது. அப்படி இருக்கும் போது, மேற்கு வங்க மாநில அரசு அதை தடை செய்திருக்கிறது. அங்கு நீதிமன்ற அனுமதியுடன் அந்த திரைப்படம் மீண்டும் வருவதற்கு வாயப்பு இருக்கிறது.
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை இன்னும் நான் பார்க்கவில்லை. ஆனால் நான் கேள்விப்பட்ட வரை, அந்த திரைப்படத்தில் கூறப்பட்டுள்ள மையக்கருத்து உண்மை. அதில் எந்த சந்தேமும் இல்லை. ஆனால் அந்த விஷயத்தை அவர்கள் சரியாக சொன்னார்களா.. ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்ததாக திரைப்படத்தில் கூறப்படும் எண்ணிக்கை சரியானதா என்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால், கேரளாவில் இருந்து ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு ஆட்கள் சேர்ந்தது உண்மைதான்.
இதை எல்லாவற்றையும் தாண்டி, ஒரு திரைப்படத்தை மக்கள் பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. அதில் கூறப்பட்டிருக்கும் கருத்து உண்மைதானே. சரி அதையும் விடுங்கள். தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை திமுக எதிர்க்கிறது. அந்த திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ள விஷயங்களை தவறு என அக்கட்சியினர் கூறுகிறார்கள். அப்படி இருக்கும்போது, ஒரு தவறான திரைப்படம் என தெரிந்த பிறகும், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கியது ஏன்? என அண்ணாமலை கேள்வியெழுப்பினார்.