சென்னை: சர்வதேச செவிலியர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இத்தாலி நாட்டில் பிறந்த ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேலின் மருத்துவ சேவையைக் கவுரவிக்கும் வகையில் மே 12-ம் தேதி சர்வதேச செவிலியர் தினமாக 1965-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி, தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவப்படத்துக்கு செவிலியர்கள் நேற்று மலர்தூவி மரியாதை செய்தனர். தொடர்ந்து மருத்துவமனைகளில் கேக் வெட்டி செவிலியர்களுக்கு வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டன.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், முதல்வர் தேரணிராஜன் தலைமையிலும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், முதல்வர் நாராயணசாமியின் தலைமையிலும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், முதல்வர் பாலாஜி தலைமையிலும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இயக்குநர் மணி தலைமையிலும் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.
இதற்கிடையே செவிலியர் தினத்தையொட்டி தெலங்கானா ஆளுநர், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்திகள்:
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: மருத்துவர்களுக்கு பக்கபலமாகவும், மருத்துவம் பெறுபவர்களுக்கு பக்கத் துணையாகவும், கரோனா உச்சத்திலும் அச்சமின்றி நமக்கு துணை நின்ற வெள்ளுடை தியாகிகளுக்கு நாம் துணை நிற்போம்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: அன்பும் அரவணைப்பும் சேர்த்து நோயாளிகளைக் கனிவுடன் கவனித்து அவர்கள் நலம்பெற சேவையாற்றும் செவிலியர் அனைவருக்கும் சர்வதேச செவிலியர்கள் நாள் வாழ்த்துகள்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: தன்னலமின்றி மருத்துவ சேவையாற்றி உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ தங்கள் வாழ்வையே அர்ப்பணித்து வரும் செவிலியர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: மக்களுக்கு நோயற்ற வாழ்வியலுக்கு முக்கியப் பங்காற்றும் செவிலியர்களுக்கு வாழ்த்துகள்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: தாய்க்கு நிகரான அன்பும் பரிவும் கொண்டு, பொறுமையுடன் ஆற்றும் அரும்பணியான செவிலியர் பணியில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுக்கு நல்வாழ்த்து.
பாமக நிறுவனர் ராமதாஸ்: மற்றவர்களின் நலனுக்காக சேவையால் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் அனைத்து செவிலியர்களுக்கும் சர்வதேச செவிலியர் தின நல்வாழ்த்துகள். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி: ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.